கரூரில் நடைபெற்ற குடிமராமத்து பணிகளை தடுத்ததாகவும், அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும் பதிவு செய்யப்பட்ட வழக்கில், அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனையுடன் கூடிய முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
கரூரில் நடைபெற்ற குடிமராமத்து பணிகளை தடுத்ததாகவும், அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும் பதிவு செய்யப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், முன் ஜாமின் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, 2022-ம் ஆண்டு முதல் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது நிலுவையில் உள்ள வழக்குகள் மற்றும் அதன் தற்போதைய நிலை பற்றி பதிலளிக்க காவல்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதைத் தொடர்ந்து, இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு மீண்டும் இன்று (24.04.20240 விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில், முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது 23 வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும், அதில் சில வழக்குகள் ரத்து செய்யப்பட்டுவிட்டதாகவும், சில வழக்குகளின் விசாரணை நிலுவையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனையுடன் கூடிய முன் ஜாமின் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். மேலும், மேலும், ஒரு லட்சம் ரூபாய்க்கான பிணைத் தொகை உத்தரவாதத்தை செலுத்தவும், விசாரணைக்கு தேவைப்படும் போது நேரில் ஆஜராகவும் உத்தரவிட்டார்.
முன்னதாக, அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தன் மீது உள்ள 6 ஆறு வழக்குகளை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு விவரங்கள்: கடந்த 2021-ம் ஆண்டு அ.தி.மு.க ஆண்டு விழாவின்போது கொரோனோ விதிகளை பின்பற்றாமல், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது பதிவு சேய்யப்பட்ட வழக்கு கரூர் மாவட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தது.
அதேபோல், கடந்த 2022-ம் ஆண்டு வீட்டு வரி, மின்சார கட்டணம், பால் விலை உயர்வு ஆகியவற்றை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டம் மற்றும் அதே ஆண்டில் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடத்திய போது, சட்டவிரோதமாக ஒன்று கூடியதுடன், பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியதாக பதியப்பட்ட வழக்கும் கரூர் மாவட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தது. இப்படி பதிவு செய்யப்பட்ட ஆறு வழக்குகளையும் சென்னை உயர்நீதிமன்றம் கடந்த மார்ச் 12ம் தேதி ரத்து செய்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“