பா.ஜ.க-வில் தான் சேரப்போவதாக திட்டமிட்டு வதந்தி பரப்புகிறார்கள் என்று அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.
தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தமிழ்நாடு முழுவது நடத்திய , ‘என் மண், என் மக்கள்’ யாத்திரையின் நிறைவு விழா திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற்றது. இந்த நிறைவு விழா பொதுக்கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றுப் பேசினார்.
இந்த நிறைவு விழாவுக்கு முன்னாதாக, முக்கிய அரசியல் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் பா.ஜ.க-வில் இணைய உள்ளதாகவும், மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளதாகவும், இந்நிகழ்ச்சி கோவையில் ஒரு தனியார் ஹோட்டல் வளாகத்தில் திங்கள்கிழமை (பிப். 26) நடைபெற இருப்பதாகவும் பா.ஜ.க சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, ஞாயிற்றுக்கிழமை (பிப். 25) செய்தியாளர்களிடம் பேசியபோது, கோவை கூட்டத்துக்கு முன் பெரிய தலைவர்கள் பா.ஜ.க-வில் இணைவார்கள், அதனால், இங்கே இருக்கும் பெரிய ஆட்களை சரி செய்ய வேண்டியுள்ளது” என்று கூறினார். பா.ஜ.க-வுக்கு முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் வர இருக்கிறார்கள் என்ற அண்ணாமலையின் பேச்சைத் தொடர்ந்து, அ.தி.மு.க முன்னாள் அமைச்சரும், கொங்கு மண்டலத்தில் அ.தி.மு.க-வின் முக்கிய தலைவருமான எஸ்.பி. வேலுமணி பா.ஜ.க-வில் இணைய உள்ளதாக செய்திகள் வெளியானது.
அதே போல, அ.தி.மு.க கோவை மாநகர் மாவட்டச் செயலாளரும் கோவை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ-வுமான அம்மன் அர்ச்சுனன் பா.ஜ.க இணைப்பு விழா நடைபெற இருந்த தனியார் ஹோட்டல் அருகே இருந்ததால் அவரும் பா.ஜ.க-வில் இணைய உள்ளதாக தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியானது.
ஆனால், திட்டமிட்டபடி முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பா.ஜ.க-வில் இணையும் நிகழ்ச்சி நடக்கவில்லை. இறுதியில் இந்த நிகழ்ச்சி, கால அவகாசம், பாதுகாப்பு தேவைப்பட்டதால், அடுத்த வாரத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளத என்று பா.ஜ.க சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், அ.தி.மு.க முக்கிய தலைவர்கள் பா.ஜ.க-வில் இணைய உள்ளதாக வெளியான செய்தியை அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் கல்யாணசுந்தரம் திட்டவட்டமாக மறுத்துள்ளார். கோவை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ அம்மன் அர்ச்சுனன் உடன் சேர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த கல்யாணசுந்தரம் கூறியதாவது: “இதில் நான் விளக்கம் கொடுக்க காரணம், நானும் பா.ஜ.கவில் இணையப்போவதாக வதந்திகள் கிளம்பியுள்ளன. அ.தி.மு.க தொண்டர்களின் மனஉறுதியை குலைக்கும் வகையில் இந்த வதந்திகளை பரப்பிவருகின்றனர். இது அறமற்ற அரசியல். பா.ஜ.க.வுக்கும், தி.மு.க.வுக்கும் நாங்கள் சொல்லிக்கொள்வது எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க மூன்றாம் தலைமுறை அரசியலில் வீறு நடைபோட்டு வருகிறது. நாங்கள் எங்கள் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்கத் தயாராகி வருகிறோம். இந்த அறமற்ற அரசியலை பா.ஜ.க.வும், தி.மு.க.வும் நிறுத்தி கொள்ள வேண்டும்.
இதேபோல் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி குறித்து வெளியாகும் தகவல் அனைத்தும் அடிப்படை ஆதாரமற்றவை. இது அயோக்கியத்தமான முயற்சி. 1972-ல் எம்.ஜி.ஆர் கட்சி ஆரம்பித்த நாளில் இருந்து அ.தி.மு.க குடும்பமாக எஸ்.பி. வேலுமணி குடும்பம் இருந்து வருகிறது. அவர் பிறக்கிற போதே அ.தி.மு.க-காரராக பிறந்தார். இவ்வளவு நாட்களாக கட்சிக்காக பணியாற்றியுள்ளார். எப்படி ஜெயலலிதா தலைமையை ஏற்று செயல்பட்டோரோ, அதற்கு நிகராக தற்போது எடப்பாடி பழனிசாமி தலைமையையும் ஏற்று எஸ்.பி. வேலுமணி செயல்பட்டு வருகிறார். எனவே, பா.ஜ.க-வில் இணைவதாக சொல்லப்படும் சிறு பேச்சுக்கு கூட இடமில்லை. அந்த சிந்தனைக்கு கூட இடமில்லை. முழுமையாக நாங்கள் இந்த செய்தியை மறுக்கிறோம். அறம் என்று ஒன்று இருந்தால் பா.ஜ.க.வும், தி.மு.க.வும் இந்த வேலையை நிறுத்திக்கொள்ள வேண்டும்.
வடக்கில் இதுபோல் பா.ஜ.க செய்திருக்கலாம். வடக்கில் இதுபோல் செய்ததை கொண்டு இங்கும் செய்யலாம் என நினைக்க வேண்டாம். இது தமிழ்நாடு. இது அ.தி.மு.க. இங்கே இருக்கிற ஒரு கைப்பிடி மண்ணைக்கூட எவரும் எடுக்க முடியாது. அதற்கான வாய்ப்பு இல்லை. லேகியம் விற்பவர்கள் எல்லாம் தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்கள் ஆனால், என்னவாகும் என்பதற்கு எடுத்துக்காட்டு தான் இது” என்று கூறினார்.
இந்நிலையில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஒரு நிகழ்ச்சியில் பேசியிருப்பதாவது: “3% - 4% வாக்கு வங்கி வைத்திருக்கிற பா.ஜ.க-வில் நான் சேருவதாகச் சொல்கிறார்கள். இதுக்குபோய் நான் பதில் சொல்ல வேண்டுமா? ‘Don't care’ (பொருட்படுத்த வேண்டாம்) என்று விட்டுவிட்டு போய்விட வேண்டும். தி.மு.க - அ.தி.மு.க கூட்டணி சேருமா? பா.ஜ.க - காங்கிரஸ் கூட்டணி சேருமா? அதுபோலத்தான் அ.தி.மு.க தாய் கட்சி இங்குதான் வந்து சேர்வார்கள். நான் பா.ஜ.க-வில் சேரப்போவதாக திட்டமிட்டு வதந்தி பரப்பப்படுகிறது” என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.