தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பு தலைமை செயலக வளாகத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் செங்கோட்டையன் பங்கேற்காத நிலையில், இன்று சபாநாயகர் அப்பாவுடன் செங்கோட்டையன் தனியாக சந்தித்து பேசியது தமிழக அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ளது.
இந்நிலையில், வேளாண் பட்ஜெட் முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, வேளாண் பட்ஜெட்டை 1.30 மணி நேரம் வாசித்தது மட்டுமே திமுகவின் சாதனை. விவசாயிகளை ஏமாற்றும் பட்ஜெட்டாக இது உள்ளது என்று விமர்சித்தார். தொடர்ந்து அவரிடம், செங்கோட்டையன் ஏன் உங்களைத் தவிர்க்கிறார் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். ஏன் தவிர்க்கிறார் என்று அவரைப் போய் கேளுங்கள், தனிப்பட்ட முறையில் இருக்கும் பிரச்னை குறித்த கேள்வியை இங்கு கேட்க வேண்டாம். அவரிடம் கேட்டால்தானே காரணம் தெரியும். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.
இதனிடையே, எடப்பாடி பழனிசாமியை சந்திப்பதை தவிர்த்து, அதிருப்தியில் உள்ள செங்கோட்டையனிடம் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் 5 பேர் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது. சட்டப்பேரவைக்குள் கடம்பூர் ராஜூ, கே.பி.அன்பழகன், எஸ்.பி.வேலுமணி, அக்ரி கிருஷ்ணமூர்த்தி, காமராஜ் என 5 முன்னாள் அமைச்சர்கள் அடுத்தடுத்து செங்கோட்டையன் அருகே சென்று அமர்ணந்து சமாதானம் பேசி உள்ளனர். முன்னாள் அமைச்சர்கள் 5 பேர் சமாதானம் செய்ய முயன்றும் சட்டப்பேரவை நிறைவு பெற்ற பிறகு தனியாக புறப்பட்டுச் சென்றார்.
எடப்பாடி பழனிசாமியின் கருத்து குறித்து, செங்கோட்டையனிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, 'இது குறித்து பேச வேண்டாம்' எனக் கூறி சென்றுவிட்டார்.