முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, 2017-ம் ஆண்டு, நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் கொலை, கொள்ளை சம்பவங்கள் நடைபெற்றது. எஸ்டேட் காவலாளி ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில், அங்கிருந்த ஏராளமான ஆவணங்கள் திருடு போனதாக குற்றம் சாட்டப்பட்டது. இதுகுறித்து மேற்கு மண்டல காவல்துறை தலைவர் சுதாகர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பான வழக்கு ஊட்டி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த சிலநாட்களுக்கு முன்னர் குற்றம்சாட்டப்பட்ட சயான், வாளையார் மனோஜ், ஜம்சீர் அலி, சதீசன், பிஜின்குட்டி, உதயன், சந்தோஷ் சாமி ஆகியோர் ஆஜரானார்கள்.வழக்கை விசாரித்த நீதிபதி விசாரணையை அடுத்த மாதம் 29-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் கொடநாடு கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியான கனகராஜின் சகோதரர் பழனிவேல் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கனகராஜ் மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் பழனிவேல் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாக கொடநாடு வழக்கில் தொடர்புடைய கனகராஜ் சேலம் ஆத்தூரில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது கார் மோதி மர்மமான முறையில் இறந்தார். கனகராஜின் மரணம் விபத்து அல்ல, கொலை என காவல் நிலையத்தில் அவரது மனைவி புகார் அளித்திருந்தார்.
இந்த நிலையில், கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ ஆறுக்குட்டி விசாரணைக்கு அழைக்கப்பட்டார். விசாரணைக்கு ஆஜாரான பின்னர், அவர் ஊடகங்களில் பரபரப்பு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது: “இறந்த கனகராஜ் எனக்கு 2 வருஷமா டிரைவராக இருந்தார். அந்த அடிப்படையில் என்னிடம் விசாரித்தார்கள். அந்த கனகராஜ் என்னிடம் ஏதாவது பேசியிருப்பாரா? ஏதாவது சொல்லி இருப்பாரா? நான் ஏதாவது சொல்லியிருப்பேனா என்ற அடிப்படையில், சந்தேக அடிப்படையில் கூப்பிட்டு கேட்டார்கள். அதற்கு நான் தெளிவாகச் சொன்னேன். என்னிடம் டிரைவராக இருந்தார் என்பதால் கூப்பிட்டு விசாரிக்கிறீர்கள். எனக்கு என்ன தெரியுமோ அதை நான் சொல்கிறேன். கொடநாடு கொலை வழக்கில் யார் தவறு செய்திருந்தாலும் 10 பேர்களை யார் தூண்டிவிட்டார்களோ அவர்கள் தண்டனையை அனுபவிப்பார்கள். அதில் மாற்றுக்கருத்து இல்லை. என்னுடைய தரப்பில், எனது மகன் அசோக் பிரபு, எனது தம்பி பாலாஜி, பி.ஏ.வாக இருந்த நாராயணசாமியை விசாரித்தார்கள். அதற்கு காரணம், கனகராஜ் தொடர்ந்து 2 வருஷம் எங்களிடம் வண்டி ஓட்டிக்கொண்டிருந்தார்.
அதனால், அவர்கள் விசாரிக்கிறார்கள் என்று நாம் சங்கடப்படக் கூடாது. கனகராஜ் 2 வருஷமாக எங்ககூடாதான் இருந்தார். ஆனால், இந்த மாதிரி விஷயம் பண்ணுவார் என்று தெரியவில்லை. அவராக தவறு செய்தாரா? இல்லை வேறு யாராவது தூண்டிவிட்டு சென்றாரா? அவர் தூண்டிவிடு போயிருக்கிறார் என்றுதான் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.
நான் என்னை திமுகவில் முதலமைச்சர் முன்பு இணைத்துக்கொண்டிருக்கிறேன். இந்த கொடநாடு வழக்கைப் பொறுத்தவரை நான் குற்றவாளியாக இருந்தால் முதலமைச்சர் கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பார் அதில் மாற்றுக் கருத்து இல்லை. தவறு செய்தால் ஏற்றுக்கொள்ள வேண்டும். நாம் ஒரு இயக்கத்துக்கு போய்விட்டு ஐயோ காப்பாற்றுங்கள் என்று சொல்லக்கூடாது. ஏனென்றால், நமக்கு பயம் இல்லை. அது போன்ற சம்பவங்களில் நாம் போக மாட்டோம்.” என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“