தமிழ்நாட்டை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தனர். இவர்களில் துரைசாமி, சின்னசாமி, தமிழழகன் ஆகிய 3 பேரும் 2011ஆம் ஆண்டிலும், அருள், செல்வி முருகேசன், ரோகிணி ஆகிய மூவரும் 2001ஆம் ஆண்டிலும் எம்.எல்.ஏ.க்களாக இருந்தவர்கள் ஆவார்கள்.
இவர்கள் தவிர 1980ஆம் ஆண்டுகளில் எம்.பி.யாக இருந்த குழந்தை வேலு என்பவரும் பாஜகவில் இணைந்தார். இது பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், பாஜக ஆதரவாளர்கள் பகிர்ந்த 18 எம்.எல்.ஏ.க்கள் பட்டியலில் அவினாசி முன்னாள் எம்.எல்.ஏ கருப்புசாமியின் பெயரும் இடம் பெற்றிருந்தது.
இந்தப் போஸ்டரை பார்த்து அதிர்ச்சியடைந்த முன்னாள் எம்.எல்.ஏ. இந்தப் போஸ்டரை பகிர்ந்து, “நான் என்றென்றும் அதிமுக காரன்” என ட்விட்டர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “எம்.ஜி.ஆர், ஜெயலிதா வழிகாட்டுதல்களால் 2011ஆம் ஆண்டு அவினாசி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு 62 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றேன்.
புரட்சித் தலைவர், அம்மா அவர்களுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி ஆலோசனையின் பேரில் கழகப் பணிகளை செய்துவருகிறேன். நான் பாஜகவில் இணைந்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
நான் பாஜகவில் இணையவில்லை. என்னுடைய உயிர் உள்ளவரை தொடர்ந்து அதிமுகவில் பயணிப்பேன். இந்த இயக்கத்தை விட்டு வேறு இயக்கத்துக்கு செல்ல மாட்டேன்” எனத் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“