பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவ்ர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த பா.ஜ.க முன்னாள் நிர்வாகி அஞ்சலையை தனிப்படை போலீசார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், ஜூலை 5-ம் தேதி பெரம்பூரில் அவருடைய வீட்டுக்கு வெளியே கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவம் நாட்டையே உலுக்கி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உ.பி. முன்னாள் முதல்வர் மாயாவதி தமிழகத்திற்கு வந்து ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். ஒரு தேசிய கட்சியின் மாநிலத் தலைவரை அவருடைய வீட்டுக்கு வெளியே படுகொலை செய்யும் அளவுக்கு தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு நிலை உள்ளது என்று விமர்சனம் செய்தார்.
அம்ஸ்ட்ராங்க் கொலை வழக்கில், -ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு (39), குன்றத்தூரைச் சேர்ந்த திருவேங்கடம் (33) உட்பட 11 பேரை அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டனர். கைதான 11 பேரையும் 5 நாள் காவலில் எடுத்து போலீஸார் விசாரித்தனர்.
அப்போது, விசாரணைக்காக அழைத்துச் சென்றபோது, போலீஸாரின் பிடியில் இருந்து தப்பிய திருவேங்கடம் ஜூலை 14 ம் தேதி போலீஸாரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார்.
இதற்கிடையே, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. மேலும், ஆம்ஸ்ட்ராங் கொலை விவகாரத்தில் கொலையாளிகளுக்கு ரூ.1 கோடி வரை கைமாறியதாக தகவல்கள் வெளியானது.
தி.மு.க நிர்வாகி மகன் மற்றும் அ.தி.மு.க, பா.ஜ.க, த.மா.கா ஆகிய கட்சிகளைச் சேர்ந்தவர்களும் உள்ளதாக போலீஸார் தெரிவித்திருந்தனர். அதன்படி, தொடர்ந்து, சதீஷ், மலர்க்கொடி, ஹரிஹரன் ஆகிய மூன்று வழக்கறிஞர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், பா.ஜ.க-வில் வட சென்னை மேற்கு மாவட்ட துணைத் தலைவர் பதவியில் இருந்த அஞ்சலை என்பவரை போலீசார் தேடி வந்தனர்.
இதையடுத்து, பா.ஜ.க-வின் வட சென்னை மேற்கு மாவட்ட துணைத் தலைவர் பதவியில் இருந்து அஞ்சலை நீக்கப்படுவதாக கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் கரு. நாகராஜன் பா.ஜ.க சார்பில் அறிக்கை வெளியிட்டார்.
ஆம்ஸ்ட்ராங் கொலி வழக்கில் தேடப்பட்டு வந்த பா.ஜ.க-வின் முன்னாள் நிர்வாகி அஞ்சலை தலைமறைவாக இருந்த நிலையில், வெள்ளிக்கிழமை தனிப்படை போலீஸாரால் கைது செய்யப்பட்டார். அவரை சென்னையில் ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. புளியந்தோப்பை சேர்ந்த அஞ்சலை (48) ஆற்காடு சுரேஷுக்கு நெருக்கமானவர் என தகவல் வெளியாகி உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.