தமிழக முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா ஐ.ஏ.எஸ் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று (ஏப்ரல் 10) உயிரிழந்தார். அவருக்கு வயது 72. இவரின் மறைவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். ஆளுநர் ரவி விடுத்துள்ள இரங்கல் குறிப்பில், "மூத்த ஐஏஎஸ் அதிகாரி நரேஷ் குப்தாவின் மறைவு வருத்தம் அளிக்கிறது. தமிழ்நாட்டு மக்களுக்கு மிகுந்த சிரத்தையுடனும் நேர்மையுடனும் சேவையாற்றிய அவர், சிறந்த நிர்வாகியாக என்றும் நினைவுகூரப்படுவார். அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் அனுதாபங்கள். ஓம் சாந்தி" எனப் பதிவிட்டுள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "முன்னாள் தலைமைத் தேர்தல் அலுவலரும், காந்தியப் பற்றாளருமான நரேஷ் குப்தா ஐ.ஏ.எஸ் (ஓய்வு) மறைந்த செய்தி அறிந்து வருத்தமுற்றேன். உள்துறைச் செயலாளர், மாநிலத் திட்டக் குழுவின் உறுப்பினர்-செயலாளர் எனப் பல உயர் பொறுப்புகளில் பணியாற்றிய மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரியாக விளங்கியவர் நரேஷ் குப்தா. அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.
காந்தி போதனை
உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியான நரேஷ் குப்தா, தமிழகத்தின் தலைமை தேர்தல் அதிகாரியாக நீண்டகாலம் பணியில் இருந்தவர். 05.01.2005 முதல் 31.07.2010 வரை தமிழகத்தின் தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்துள்ளார்.
2006 சட்டமன்றத் தேர்தல் மற்றும் 2009-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல்கள் அவருக்கு சவால் நிறைந்ததாக இருந்தபோதும், அதைச் சிறப்பாகச் செய்துகாட்டியவர். வாக்காளர் பட்டியல் திருத்தம் உள்ளிட்ட பணிகளை திறம்பட மேற்கொண்டவர். பணியில் இருந்து ஓய்வு பெற்றபிறகு காந்தி போதனைகளை பரப்பும் பணியினை செய்துவந்தார். தலைமை தேர்தல் அதிகாரியாக பதவி வகிப்பதற்கு முன்பு, 2001-2002-இல் உள்துறைச் செயலராகவும், 2002-2005இல் மாநில திட்டக்குழுவின் உறுப்பினர் மற்றும் செயலராகவும் பணிபுரிந்துள்ளார். தன்னுடைய பணிக்காலத்தில் மிகவும் எளிமையான, நேர்மையான அதிகாரி எனப் பெயர் எடுத்தவர் நரேஷ் குப்தா.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“