தட்சிணா கன்னட துணை ஆணையர் பதவியில் இருந்து விலகிய சசிகாந்த் செந்தில் (ஐஏஎஸ்) நாளை தன்னை காங்கிரஸ் கட்சியில் இணைத்துக் கொள்கிறார்.
குடியுரிமை திருத்தம் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர்.
2009 கர்நாடக கேடர் ஐ.ஏ.எஸ் அதிகாரியான செந்தில், ஜூன் 2017 அன்று தட்சிணா கன்னட துணை ஆணையராக பதிவி ஏற்று தனது சுறுசுறுப்பான நடவடிக்கைகளால் அனைவரும் கவர்ந்தவர். தமிழ்நாட்டைச் சேர்ந்த சசிகாந்த், திருச்சியில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் பெற்றவர்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் குறிப்பில், " அரசியல் அமைப்பு சட்டத்தில் உள்ள விழுமியங்களோடு நெருக்கமான ஒரு இயக்கமாக காங்கிரஸ் இயக்கத்தைப் பார்க்கிறேன். காங்கிரஸ் கட்சியின் தற்போதைய தலைமை இன்று இந்தியா கருத்தியல் போரை முன்னெடுக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்துள்ளது. காங்கிரஸ் கட்சி வேற்றுமையை வலியுறுத்தவில்லை. ஒருங்கிணைந்து செயல்படுவதன் அவசியத்தை வலியுறுத்துகிறது. வெறுப்பை நம்பவில்லை. அன்பையும் நேசத்தையும் நம்புகிறது.
வரும் நாட்களில் நாட்டின் பல பகுதிகளுக்கு பயணித்து காங்கிரஸ் கட்சியை வளர்ப்பதற்கும் அரசியல் அமைப்புச் சட்டம்சொல்லும் செய்தியினை மக்களிடையே எடுத்துச் செல்லவும், இந்தியாவின் விளிம்புநிலை மக்களின் வாழ்வை மேம்படுத்துவதற்கும் என் உழைப்பு செலவிட முடிவு செய்துள்ளேன் " என்று தெரிவித்தார்.
மேலும், பிரிவினைவாத சக்திகளுக்கு எப்போதும் தமிழகம் சிம்ம சொப்பனமாக விளங்கிவருகிறது. இந்நிலையை நீடிக்கச் செய்து தமிழகத்தில் பிரிவினைவாத சக்திகள் காலூன்றாமல் இருப்பது உறுதி செய்யவேண்டியது எனது கடமை என்றே கருதுகிறேன். தமிழக மக்கள் தங்கள் பிள்ளைகள் பள்ளிக்குச் செல்வதை விரும்புகிறார்களே ஒழிய வீதிகளில் மதக் கலவரங்களில் ஈடுபடுவதை அவர்கள் விரும்பவில்லை. தமிழக மக்கள் சமத்துவத்தையும் சமூக நீதியையும் நிலைநிறுத்த எத்தகைய தியாகத்தையும் செய்யத் தயாராக உள்ளனர் என்றே நான் நம்புகிறேன்.
தமிழக மக்களோடு அவர்களின் சேவையில் எனது இறுதிமூச்சு வரை தமிழகத்தில் அடிப்படை விழுமியங்களை காப்பதற்காக போராட வேண்டும் என்று முடிவெடுத்துள்ளேன். மக்களுக்காக பணியாற்றுவதையே நான் எப்போதும் விரும்பியிருக்கிறேன். காங்கிரஸ் கட்சியில் இணைந்த பின்னரும் அதையே தொடர்ந்து செய்வேன்’ என்றும் தெரிவித்தார்.