ஒரே நாடு ஒரே திட்டத்துக்கு முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வரவேற்பு அளித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற மத்திய அரசின் கொள்கை முடிவினை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் முதற்கண் வரவேற்கிறேன்.
மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் சில விதிவிலக்குகளை தவிர 1967ஆம் ஆண்டுவரை ஒரே சமயத்தில் நடத்தப்பட்டுவந்தன என்பதை நாம் அனைவரும் அறிவோம்.
இதற்குப் பிறகு மத்திய அரசால் பல மாநில அரசுகள் அவ்வப்போது கலைக்கப்பட்டதன் காரணமாகவும், முன்கூட்டியே சில மாநிலங்களுக்கு தேர்தல் நடத்தப்பட்டதன் காரணமாகவும் மக்களவை தேர்தல் ஒரு காலக்கட்டத்திலும் மாநில தேர்தல் வெவ்வேறு காலக்கட்டத்திலும் நடத்தப்பட்டுவருகின்றன.
அவ்வப்போது தேர்தல் நடத்தப்படுவதால் அரசுக்கு கூடுதல் செலவுகள் ஏற்படுகின்றன. அத்தோடு வளர்ச்சித் திட்டங்கள் தடைபடும் சூழலும் நிலவுகிறது.
ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற முழக்கம் கடந்த 10 ஆண்டுகளாக இருந்து வந்தாலும், அதற்கான முன்னெடுப்பினை தற்போது மத்திய அரசு எடுத்துள்ளது.
2024ஆம் ஆண்டு ஏப்ரல்-மே மாதத்தில் மக்களவை தேர்தல் நடத்தப்பட இருப்பதை முன்னிட்டு, இதனுடன் இந்த ஆண்டு நடைபெற உள்ள சில மாநில சட்டமன்ற தேர்தல்களையும் நடத்த வேண்டும் என்ற அடிப்படையில் ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்த சாத்தியக்கூறுகளை ஆராய முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு அமைக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.
ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற கொள்கை நடைமுறைக்கு வரும்பட்சத்தில் இன்னும் சில ஆண்டுகளில் மக்களவை மற்றும் அனைத்து மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தக்கூடிய நிலை உருவாவதோடு மக்களுக்கான வளர்ச்சி திட்டங்கள் தங்கு தடையின்றி செல்லக்கூடும்.
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்த ஆரம்பத்தில் பல்லாயிரக்கணக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபிஏடி இயந்திரங்கள் வாங்க இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கூடுதல் செலவு ஏற்படும் என்றாலும் தொலைநோக்குப் பார்வையில் இதனை உற்றுநோக்கும்போது வருங்காலங்களில் தேர்தலுக்கான செலவு கணிசமாக குறைக்கப்படும். இதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.
அடுத்த ஆண்டு வரவிருக்கின்ற மக்களவை தேர்தலுக்குள் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என்றால் அரசியலமைப்பு சட்டத்தில் 5 திருத்தங்களை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டி உள்ளது அவசியமாகிறது.
மக்களின் நலனையும், நாட்டின் வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற முடிவினை மனதார பாராட்டுவதோடு, அரசியலமைப்பு சட்டத் திருத்தங்களுக்கு அதிமுக முழு ஒத்துழைப்பையும் அளிக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.