தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து இதுவரை அழைப்பு வரவில்லை என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
அ.தி.மு.க.,வில் ஏற்பட்ட ஒற்றை தலைமை முழக்கத்திற்கு பிறகு, பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் சென்றாலும், தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிச்சாமியை பொதுச் செயலாளராக அங்கீகரித்துள்ளது.
இதனால் மக்களிடம் நீதிக்கேட்கும் புரட்சி பயணத்தை ஓ.பன்னீர்செல்வம் தொடங்கினார். இந்தநிலையில், சமீபத்தில் டெல்லியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அழைப்பின்பேரில், அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துக் கொண்டார். ஆனால், அ.தி.மு.க.,வில் தன்னை மற்றொரு அணியாக அறிவித்து இயங்கி வரும் ஓ.பன்னீர்செல்வத்திற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.
இந்தநிலையில், இன்று மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமிழகத்திற்கு காவிரி நீர் தரமுடியாது என கர்நாடகா கூறுவது சட்டவிரோதம். சட்டப்படியோ, பேச்சுவார்த்தை மூலமோ, காவிரி நீரை பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டப் போராட்டம் அல்லது பேச்சுவார்த்தை மூலம் தி.மு.க அரசு துரிதமாக செயல்பட்டு, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பெற்று தந்த உரிமையை நிலைநாட்ட வேண்டும்.
நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து இதுவரை அழைப்பு வரவில்லை. சசிகலாவை இதுவரை சந்திக்கவில்லை. விரைவில் சசிகலாவை சந்திக்க வாய்ப்பு உள்ளது. புரட்சி பயணம் மீண்டும் தொடரும். இவ்வாறு ஓ.பி.எஸ் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“