/tamil-ie/media/media_files/uploads/2017/07/OPS.jpg)
சட்டப்பேரவையில் இருக்கை மாற்றம்; 2வது நாளாக அவைக்கு வராத ஓ.பி.எஸ்
தமிழ்நாடு சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு அடுத்து, முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்-க்கு ஒதுக்கப்பட்டிருந்த இருக்கை ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், புதன்கிழமை அவருடைய இருக்கை பின்வரிசைக்கு மாற்றப்பட்டதால், ஓ.பன்னீர்செல்வம் 2-வது நாளாக அவைக்கு வரவில்லை என்பது தமிழக அரசியலில் கவனம் பெற்றுள்ளது.
எடப்பாடி பழனிசாமியும் ஓ. பன்னீர்செல்வமும் இணைந்திருந்தபோது, 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராகவும் ஓ. பன்னீர்செல்வம் எதிர்கட்சித் துணைத் தலைவராகவும் இடம்பெற்றனர். விரைவிலேயே, அ.தி.மு.க-வில் எடப்பாடி பழனிசாமியின் செல்வாக்கு உயர்ந்து, பொதுக்குழு தீர்மானத்தின்படி, ஓ. பன்னீர்செல்வம் அ.தி.மு.க-வில் இருந்து நீக்கப்பட்டார். எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து, முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவராக அ.தி.மு.க சார்பில் நியமிக்கப்பட்டார்.
இதைத் தொடர்ந்து, அ.தி.மு.க பொதுக்குழு தீர்மானத்தை எதிர்த்து ஓ.பி.எஸ் நடத்திய சட்டப் போராட்டங்களில், அ.தி.மு.க பொதுக்குழுவின் முடிவை உறுதி செய்து எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு ஆதரவாக நீதிமன்ற தீர்ப்புகள் வந்தன. இதனால், ஓ. பன்னீர்செல்வம் அ.தி.மு.க-வில் இருந்து முழுவதுமாக விலகி நிற்கிறார்.
அ.தி.மு.க-வில் இருந்து தன்னை நீக்கியதை எதிர்த்து, ஓ.பி.எஸ் தொடர்ந்த வழக்குகள் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்ததால், எடப்பாடி பழனிசாமிக்கு அருகேயே ஓ.பன்னீர்செல்வத்துக்கு இருக்கை ஒதுக்கப்பட்டு, சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பங்கேற்று வந்தார்.
சட்டப்பேரவையில் இருக்கை மாற்றம்.. இரண்டாவது நாளாக இன்றும் ஓ.பன்னீர் செல்வம் அவைக்கு வரவில்லை#SunNews | #TNAssembly | #OPSpic.twitter.com/lzq89YgACC
— Sun News (@sunnewstamil) February 15, 2024
அதே நேரத்தில், அ.தி.மு.க சார்பில், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவராக நியமிக்கப்பட்ட, ஆர்.பி. உதயகுமாருக்கு, புரோட்டோகால் அடிப்படையில், சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு அருகே இருக்கை ஒதுக்க வேண்டும் என்று 4 முறை கடிதம் அளிக்கப்பட்டும், சபாநாயகர் அனுமதி அளிக்காமல் இருந்து வந்தார்.
அ.தி.மு.க-வில் ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் தரப்பு இடையேயான வழக்கில், இ.பி.எஸ் தரப்புக்கு சாதகமாக தீர்ப்புகள் வந்த பிறகு, சட்டப்பேரவைக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமாருக்கு, புரோட்டோகால் அடிப்படையில், இ.பி.எஸ்-க்கு அருகே இருக்கை ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து வந்தது.
இந்நிலையில், நடப்பு ஆண்டுக்கான தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் பிப்ரவரி 12-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரம் முடிந்ததும், நேரமில்லா நேரத்தில், எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், “சட்டப் பேரவையில் எதிா்க்கட்சி துணைத் தலைவா் இருக்கை குறித்து 4 முறை தங்களைச் (சபாநாயர் அப்பாவு) சந்தித்து கடிதம் அளித்துள்ளோம்.
எதிா்க்கட்சித் தலைவரின் இருக்கைக்கு அருகே, துணைத் தலைவருக்கு இருக்கை ஒதுக்கும் மரபை பின்பற்றி, துணைத் தலைவரான ஆா்.பி. உதயகுமாருக்கு முன்வரிசையில் இருக்கையை ஒதுக்கித் தர வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தாா். அப்போது, குறுக்கிட்டுப் பேசிய முதல்வா் மு.க.ஸ்டாலின், இந்த விவகாரம் தொடா்பாக எதிா்க்கட்சித் தலைவா் தொடா்ந்து பேசிவருகிறாா். நீங்களும் (சபாநாயகர்) அது சட்டப்பேரவைத் தலைவரின் உரிமை தொடா்பானது என பதில் அளித்து வருகிறீா்கள். ஏற்கெனவே, இதே அவையில் அவைத் தலைவராக இருந்த பி. தனபாலின் தீா்ப்பைச் சுட்டிக்காட்டி பதில் அளித்திருக்கிறீா்கள். ஆனாலும், நான் தங்களை கேட்டுக்கொள்ள விரும்புவது, எதிா்க்கட்சித் தலைவா் எடுத்து வைத்திருக்கக் கூடிய கோரிக்கையை மறுபரிசீலனை செய்து அதற்கு ஆவன செய்யுமாறு தங்களிடம் உரிமையுடன் கேட்டுக்கொள்கிறேன்” என்று பேசினாா்.
இதையடுத்து, சபாநாயகர் அப்பாவு, சட்டப்பேரவைக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமாருக்கு இருக்கை ஒதுக்க உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து, முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு சட்டப்பேரவையில் 2-வது வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது. முன்னாள் சபாநாயகர் தனபாலுக்கு அருகே அவருக்கு இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் முதல் வரிசையில் எதிர்க்கட்சித் தலைவர் இ.பி.எஸ் அருகே எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கையில் இடம்பெற்றிருந்த நிலையில், அவருடைய இருக்கை 2-வது பின்வரிசைக்கு மாற்றப்பட்ட பின்னர், அவர் கடந்த பிப்ரவரி 14, 15 ஆகிய 2 நாட்களாக அவைக்கு வரவில்லை. சட்டப்பேரவையில், இருக்கை மாறப்பட்ட பிறகு, ஓ.பன்னீர் சட்டப்பேரவைக்கு வராதது தமிழக அரசியலில் கவனம் பெற்றுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.