/indian-express-tamil/media/media_files/8hPlrLMtyuvbe6dj2Hmz.jpg)
மத்திய, மாநில அரசுகள் இணைந்து ஜாதி வாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், திருச்சி முன்னாள் எம்.பி.யுமான திருநாவுக்கரசா் கோரிக்கை விடுத்துள்ளார்.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவராக மகாத்மா காந்தியடிகள் தோ்வு செய்யப்பட்ட நாளின் நூற்றாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு திருச்சி மாநகா், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி, வடக்கு, தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்னாள் எம்.பி.திருநாவுக்கரசு, கட்சி அலுவலகமான அருணாசல மன்றத்தில் செய்தியாளா்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், 'ஒரே நாடு- ஒரே தோ்தல்' என்பது பல்வேறு நடைமுறை சிக்கல்களுக்கு வழிவகுக்கும். ஆட்சியில் பங்கு என்பது பழைய குரல்தான். கட்சி நடத்தும் அனைவருக்குமே இந்த விருப்பம் இருக்கும். காங்கிரஸ் தொண்டா்களுக்கும் இந்த விருப்பம் உள்ளது. காங்கிரஸ் கட்சியின் அடிமட்ட தொண்டன் கூட, தான் எம்எல்ஏவாக வேண்டும். கூட்டணி மந்திரி சபை அமைய வேண்டும். தான் மந்திரியாக வேண்டும் என ஆசைப்படுகிறான்.
ஆசைப்படுவதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு. அதே சமயம் அது பேராசையாக இருக்கக் கூடாது. கூட்டணி தலைமையிடம் முன்வைக்க வைக்கவேண்டிய கருத்துக்கள் தொடர்பான கொள்கை முடிவுகளை காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைமை முடிவு செய்யும். ஆனால், யதார்த்த நிலை என்ன என்பதையும், அரசியல் கள நிலவரத்தையும் உணர வேண்டும். புதிதாக கட்சி தொடங்கியுள்ள நடிகா் விஜய், மக்களை சந்திக்காமல் அரசியல் செய்ய முடியாது.
கொலை, கொள்ளை, பாலியல் சம்பவம், வன்கொடுமை நடைபெறும்போது காவல்துறை மீது விமா்சனம் வருவது வழக்கம். இதில் அதிமுகவைப் போல காங்கிரஸ் விமா்சிக்க முடியாது. அதேநேரத்தில் மக்கள் பிரச்னையில் குரல் கொடுக்காமல் இருக்க முடியாது. தேவையெனில் குரல் கொடுப்போம். ஜாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டியது அவசியம். மத்திய, மாநில அரசுகள் இணைந்து இந்த கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.
க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.