தமிழக முன்னாள் டிஜிபியும் ஓய்வுபேற்ற ஐபிஎஸ் அதிகாரியுமான ஜே.கே. திரிபாதி ஒடிசா மாநில தகவல் ஆணையத்தின் தலைவராக நியமனம் செய்து அம்மாநில ஆளுநர் அறிவித்துள்ளார். ஜே.கே திரிபாதி நியமனம் குறித்து ஓடிசா மாநில தகவல் மற்றும் பொது தொடர்புத் துறை வியாழக்கிழமை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005 (2005 22 இன்) பிரிவு -15 துணைப்பிரிவு (3) மற்றும் அதற்காக உருவாக்கப்பட்ட குழுவின் பரிந்துரையின் பேரில், ஒடிசா ஆளுநர் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஜே.கே. திரிபாதியை மாநில ஒடிசா மாநில தகவல் ஆணையத் தலைவராக நியமனம் செய்து அறிவித்துள்ளார்.
ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற குழுவின் கூட்டத்தில் ஒடிசா தகவல் ஆணையத்தின் (ஓஐசி) தலைமை பதவிக்கு முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியின் பெயரை பரிந்துரைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விதிமுறைகளின்படி, திரிபாதி இந்த பதவிக்கு பொறுப்பேற்றதில் இருந்து 5 ஆண்டுகள் வரை அல்லது அவருக்கு 65 வயது ஆகும் வரை பதவியில் இருப்பார்.
ஒடிசா மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட ஜே.கே. திரிபாதி, 30 ஆண்டுகளாக தமிழக டிஜிபி மற்றும் சென்னை போலீஸ் கமிஷனர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் தமிழக காவல்துறையில் பணியாற்றியுள்ளார்.
தற்போது, மாநில தகவல் ஆணையத்தின் குழு நான்கு தகவல் ஆணையர்களால் நடத்தப்படுகிறது. சுனில் மிஸ்ராவின் பதவிக்காலம் முடிந்த பிறகு, ஆகஸ்ட் 15, 2021 முதல் தகவல் ஆணையத்தின் தலைமை பதவி காலியாக இருந்தது. இந்த நிலையில்தான், தமிழக முன்னாள் டிஜிபி ஜே.கே. திரிபாதி ஒடிசா மாநில தகவல் ஆணையத்தின் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"