Advertisment

27 ஆண்டுகால தி.மு.க. தொண்டர்.. தொடர் வாய்ப்புகள் வழங்கிய கருணாநிதி.. யார் இந்த எஸ்.என்.எம். உபயதுல்லா?

திமுக முன்னாள் அமைச்சர் எஸ்.என்.எம்.உபயதுல்லா மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Former DMK Minister SNM Ubayatullah passed away

மறைந்த திமுக தலைவர் மு. கருணாநிதியுடன் எஸ்.என்.எம். உபயதுல்லா.

திமுக முன்னாள் அமைச்சர் எஸ்.என்.எம்.உபயதுல்லா மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Advertisment

திமுக முன்னாள் அமைச்சர் எஸ்.என்.எம்.உபயதுல்லா தஞ்சாவூரில் இன்று (பிப்.19) காலை மாரடைப்பால் உயிரிழந்தார்.
அவரது மறைவிற்கு முதல்வர் உட்பட அரசியல் கட்சி பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் கிராமத்தில் கடந்த 1941 ஆம் ஆண்டு மே மாதம் 16 ஆம் தேதி பிறந்த முன்னாள் அமைச்சர் எஸ்என்எம் உபயதுல்லா திராவிட கொள்கைகளால் ஈர்க்கப்பட்டவர். இதன் காரணமாக திமுகவில் ஆரம்பக்கட்டத்திலேயே இணைந்த அவர் கட்சியின் வளர்ச்சிக்காக பல ஆண்டுகளாக உழைத்தார்.
பல ஆண்டுகளுக்கு முன்பே தஞ்சாவூருக்கு குடிபெயர்ந்து அங்கேயே குடும்பத்துடன் வசித்து வந்த அவர் ஆரம்பத்தில் லாட்டரி சீட்டு தொழில் நடத்தி வந்தார்.

அதன்பின்னர் ஜவுளி வியாபாரம், பேன்சி பொருட்கள் வியாபாரம் என நகரில் பல இடங்களில் கடைகளை நடத்தி வந்தார். அரசியலில் ஆர்வம் கொண்ட உபயதுல்லா திமுக தொடங்கிய காலம் முதல் அதில் தன்னை இணைத்துக் கொண்டு பணியாற்றி வந்தார்.

இவரின் செயல்பாடுகள் முன்னாள் முதலமைச்சரும், திமுக முன்னாள் தலைவருமான கருணாநிதியை வெகுவாக ஈர்த்தது. 1962-ம் ஆண்டு தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிட்ட கருணாநிதியின் வெற்றிக்காக கடுமையாக உழைத்து தேர்தல் பணியாற்றினார். இதனால் உபயதுல்லாவுக்கு தேர்தலில் போட்டியிட தொடர் வாய்ப்புகளை வழங்கினார் கருணாநிதி.

1987ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை தொடர்ந்து 27 ஆண்டுகள் திமுக நகர செயலாளராக பணியாற்றிய உபயதுல்லா, தஞ்சாவூர் தொகுதியில் நான்கு முறை எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டார். 2006 ம் ஆண்டு முதல் 2011 ம் ஆண்டு வரை வணிகவரித்துறை அமைச்சராக செயல்பட்டார்.

தமிழ் மொழி மீது கொண்டிருந்த பற்றுதல் காரணமாக தஞ்சை முத்தமிழ் மன்றத்தை நடத்தி வந்த இவர், திருக்குறள் மீதான அதீத பற்றுதல் காரணமாக தான் பேசும் கூட்டங்களில் திருக்குறளை மேற்கொள் காட்டி பேசுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

தமிழ் மொழி பற்று காரணமாக கடந்த 2020ம் ஆண்டு கலைஞர் விருதையும், 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற அரசு விழாவில் பேரறிஞர் அண்ணா விருதையும் உபயதுல்லா பெற்றார்.

இந்நிலையில் உபயதுல்லாவின் தங்கையின் பேரனின் திருமணம் இன்று (பிப்.19) தஞ்சாவூரில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இதற்காக நேற்றிலிருந்து உறவினர்கள் பலரும் தஞ்சாவூருக்கு வந்திருந்தனர். இதையடுத்து இன்று காலை 9 மணிக்கு திருமண மண்டபத்துக்கு புறப்பட்டார் உபயதுல்லா.

அப்போது லேசான மயக்கம் வருவதாக கார் ஓட்டுநரிடம் கூறியதும், உடனடியாக உறவினர்கள் தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் மாரடைப்பால் அவர் உயிரிழந்து விட்டதாக கூறினர்.

இதனால் உபயதுல்லாவின் திருமண வீடு சோகவீடாக மாறியது. உபயதுல்லாவின் உடல் அவரது வீட்டுக்கு கொண்டு வரப்பட்டதை அடுத்து, உறவினர்கள், அரசியல் கட்சியினர், பொதுமக்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

உபயதுல்லாவின் உடல் ஆத்துப்பாலத்தில் உள்ள ஜூம்மா பள்ளிவாசலில் நாளை (பிப்.20) நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. இந்நிலையில், உபயதுல்லாவின் மறைவுக்கு தமிழ்நாடு முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள இரங்கல் செய்தியில்; ''27 ஆண்டுகள் தொடர்ந்து திமுக நகர செயலாளராகவும், நான்கு முறை எம்எல்ஏவாகவும், அமைச்சரவாகவும் இருந்தவர் உபயதுல்லா.

திமுகவின் மிகப்பெரும் தூணாக, மாறாத கொள்கைப் பற்றாளராக விளங்கிய அவரின் மறைவு கழகத்துக்கு பேரிழப்பாகும். உபயதுல்லாவை இழந்து தவிக்கும் அவர்தம் குடும்பத்தினர், உறவினர் மற்றும் கட்சியினருக்கு ஆழந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்'' எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூரில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக 21ஆம் தேதி திருச்சி வரவிருக்கிறார். திருச்சியில் இருந்து கார் மூலம் திருவாரூர் செல்லும் முதல்வர் உபயதுல்லாவின் இல்லத்திற்கு சென்று அவரது மகளிடம் ஆறுதல் தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

செய்தியாளர் க.சண்முகவடிவேல்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Tamil Nadu Dmk
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment