மனைவிக்கு கொலை மிரட்டல் - முன்னாள் திமுக எம்.எல்.ஏ. அசோகனுக்கு 3 ஆண்டுகள் சிறை
இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி சாந்தி, இந்த வழக்கில் அசோகன் எதிரான குற்றசாட்டுக்கள் காவல் துறை தரப்பில் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கபட்டுள்ளது
துப்பாக்கியை காட்டி மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் எம்.எல்.ஏ வுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 11 ஆயிரம் ரூபாய் விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
Advertisment
சென்னை பட்டினப்பாக்கத்தை சேர்ந்த முன்னாள் தி.மு.க., எம்.எல்.ஏ., ஏ.அசோகன். இவரது இரண்டாவது மனைவி, ஹேமா. இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். அசோகன் தனது முதல் மனைவி சிந்துஜா உடன் தனியே வசித்து வருகிறார்.
இந்த நிலையில் 2015, டிசம்பர், 6ம் தேதி, தனது கணவரின் உதவியாளரை அழைத்துக் கொண்டு, வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு, பால், பிஸ்கட் வழங்க சென்றுள்ளார் ஹேமா. உதவிப் பொருள்களை வழங்கிவிட்டு வீட்டிற்கு வர, இரவு 11:00 மணி ஆகி உள்ளது. அப்போது, மது போதையில் இருந்த அசோகன், ஹேமா மீது சந்தேகப்பட்டு, தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
மேலும், ஹேமா மற்றும் அவரது தாயர் என இருவரையும் வீட்டை விட்டு வெளியே செல்லுமாறு, தன் கைத்துப்பாக்கியால் மிரட்டி உள்ளார். இதையடுத்து, ஹேமா பயந்து, தனது தாயாரை அழைத்து வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். அப்போது, வீட்டிற்குள், இரண்டு முறை துப்பாக்கி வெடித்த சத்தம் கேட்டுள்ளது. இது குறித்து, பட்டினம்பாக்கம் காவல்துறையில் ஹேமா புகார் அளித்தார். இதன் அடிப்படையில் அசோகன் மீது கொலை மீரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யபட்டது.
இந்த வழக்கு விசாரணை, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள எம்.பி, எம்.எல்.ஏ.களுக்கு எதிரான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி, ஜெ.சாந்தி முன் நடந்தது. அனைத்து தரப்பு சாட்சிகளும், வாதங்களும் நிறைவடைந்ததை அடுத்து வழக்கின் தீர்ப்பை நீதிபதி தள்ளிவைத்தார்.
இந்நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி சாந்தி, இந்த வழக்கில் அசோகன் எதிரான குற்றசாட்டுக்கள் காவல் துறை தரப்பில் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கபட்டுள்ளது. எனவே குற்றவாளிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் 11 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிப்பதாக தீர்ப்பளித்தார்.