திமுக முன்னாள் எம்பி கே.சி பழனிச்சாமியின் ரூ198 கோடி சொத்து விற்பனை: வங்கிகள் நடவடிக்கை

Former DMK MP K.C.Palanisamy assets sold by banks 198 crores: வங்கி விற்பனைக்கு வந்த திமுக முன்னாள் எம்பியின் சொத்துக்கள்; ரூ.198 கோடி சொத்துகள் விற்பனை

திமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமியின் ரூ.197.79 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் விற்பனைக்கு வந்துள்ளன. பழனிச்சாமியின் வங்கிக் கடனுக்காக அடமானம் வைக்கப்பட்ட சொத்துகளை விற்பனை செய்வதாகக் கோவை பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது.

திமுக சொத்துப் பாதுகாப்புக்குழு உறுப்பினராக உள்ள கே.சி. பழனிச்சாமி, கரூர் தொகுதியில் எம்.பியாகவும், அரவக்குறிச்சி தொகுதி எம்எல்ஏவாகவும் இருந்துள்ளார்.

கடந்த 2004 ஆம் ஆண்டு கரூர் மக்களவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அதன்பின் 2009-ம் ஆண்டு கரூர் தொகுதி எம்.பி. தேர்தலில் போட்டியிட்டப்போது, இந்திய அளவில் ரூ.300 கோடிக்கும் அதிகமாக சொத்து மதிப்புக் காட்டி எம்.பி. வேட்பாளர்களில் அதிக சொத்து மதிப்புக் காட்டியதில் 2 ஆவது இடத்தில் இருந்தார். அத்தேர்தலில் மக்களவை முன்னாள் துணைத்தலைவர் தம்பிதுரையிடம் தோல்வியடைந்தார்.

அதன்பின் 2011 ஆம் ஆண்டு கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவானார். அதன்பின் 2016 ஆம் ஆண்டு தேர்தலில் அதே தொகுதியில் போட்டியிட்ட நிலையில் தொகுதியில் வாக்காளர்களுக்குப் பண விநியோகம் செய்தது தொடர்பாக தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு அதேயாண்டு நவம்பரில் தேர்தல் நடைபெற்றபோது போட்டியிட்டார். அதில், அப்போது அதிமுக சார்பில் போட்டியிட்ட தற்போதைய அமைச்சர் செந்தில்பாலாஜியிடம்  தோல்வியடைந்தார்.

கே.சி.பழனிசாமிக்கு கரூர் மாவட்டம் மாயனூரில், கேசிபி பேக்கேஜிங்ஸ் என்ற சாக்குப்பை உற்பத்தி நிறுவனம் செயல்பட்டு வந்தது. புதுச்சேரியில் தொழில் நிறுவனம் உள்ளன. மேலும், கரூர் மற்றும் பொள்ளாச்சியில் சொத்துகள் உள்ளன.

இந்நிலையில் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக அவரது பெயரில் உள்ள சொத்துக்கள், அவரது மனைவி அன்னம்மாள், மகன் சிவராமன், மகள் கலையரசி பெயரில் உள்ள சொத்துகளை அடமானம் வைத்து வங்கிகளில் கிட்டத்தட்ட ரூ.200 கோடி வரை கடன் பெற்றிருந்தார். இந்நிலையில் ஸ்டேட் வங்கி உள்ளிட்ட வங்கிகளில் வைக்கப்பட்டுள்ள ரூ.197 கோடி மதிப்புள்ள சொத்துகளின் விற்பனை அறிவிப்பை கோவை பாரத ஸ்டேட் வங்கி இன்று (ஆகஸ்ட் 1ஆம் தேதி) நாளிதழ்களில் வெளியிட்டுள்ளது.

பாரத ஸ்டேட் வங்கி ரூ.81 கோடி, கனரா வங்கி ரூ.57 கோடி, யூனியன் பேங்க் ஆப் இந்தியா ரூ.35 கோடி, ஐடிபிஐ ரூ.24 கோடி என ரூ.198 கோடி சொத்துகள் விற்பனைக்கு வந்துள்ளன. கரூர் வைஸ்யா வங்கி கடனில் பிணையப்படுத்துதலில் முன்னுரிமைப் பிரச்சனை உள்ளதால் அது மட்டும் விற்பனையில் சேர்க்கப்படவில்லை என அந்த விற்பனை அறிவிப்பில் வங்கி கூறியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Former dmk mp k c palanisamy assets sold by banks 198 crores

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com