திமுக முன்னாள் எம்.பி.யும், கட்சி உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினருமான ராமநாதன் மறைவிற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஸ்டாலின், தனது இரங்கற்செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது, ' "கோவைத்தென்றல்" மு.ராமநாதனின் மறைவு செய்தி கேட்டு துடிதுடித்துப்போனேன். அவரது மறைவிற்கு கட்சி சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். இவர் 70 ஆண்டுகள் காலம் கழகத்திற்காக உழைத்தவர்.கட்சியில் பல்வேறு பதவிகளில் இருந்தவர். பல்வேறு வளர்ச்சித்திட்டங்களை கோவைக்கு கொண்டு வர காரணமாக இருந்தார்.
ஹிந்தி எதிர்ப்பு போராட்டம், மிசா சிறைவாசம் என அனைத்து போராட்டங்களிலும் கலந்துகொண்டவர். இவரின் சேவையை பாராட்டி, 1992ல் கழகத்தின் சார்பில் அண்ணா விருது வழங்கப்பட்டது.
“திராவிட இயக்கத்தின் வாரியார்” என்று போற்றும் அளவுக்கு, திராவிட இயக்கத்தின் லட்சியங்கள் தொடர்பாக 5 மணிநேரம் உணர்ச்சி பொங்க உரையாற்றும் ஆற்றல் படைத்தவர் ராமநாதன். பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர் மீது அளவுகடந்த பற்றும் பாசமும் வைத்திருந்தார். திராவிட இயக்கத்தின் பல்கலைகழகமாக திகழ்ந்த ராமநாதனின் மறைவு அவரது உறவினர்களுக்கு மட்டுமல்லாது, எனக்கும், இந்த இயக்கத்தின் கோடானு கோடி தொண்டர்களுக்கும், கொங்கு மண்டல மக்களுக்கும் பேரிழப்பாகும்' என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
-குமரன் பாபு