மணிப்பூரில் மேலும் 5 ஆயிரம் ஆயுதப்படை வீரர்களை குவிப்பது அம்மாநில பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கான வழி இல்லை என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
வட இந்திய மாநிலங்களில் முக்கிய மாநிலமாக இருக்கும் மணிப்பூரில், பழங்குடியின அந்தஸ்து வழங்கும் விவகாரத்தில் மெய்தி மற்றும் குகி இன மக்களிடையே, பெரும் மோதல் வெடித்து வரும் நிலையில், கடந்த ஆண்டு மே மாதம் ஏற்பட்ட கலவரம் இந்தியாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து அம்மாநிலத்தில் பாதுகாப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்ட நிலையில், தற்போது கலவரம் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதாக கூறப்படுகிறது.
அதேசமயம் குகி மற்றும் மெய்தி இனத்தை சேர்ந்த பயங்காரவாத குழுக்கள் தாக்குதல்களில் ஈடுபட்டு வருவதால் அம்மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதில் சமீபத்தில், ஜிரிபம் மாவட்டத்தில் நடந்த படுகொலை சம்பவம் மாநில மக்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், வன்முறையை கண்டிக்க தவறிய மாநில அரசுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மக்கள் போராட்டத்திலும் வன்முறை வெடித்த நிலையில், எம்.எல்.ஏக்கள் வீடுகளில், போராட்டக்காரர்கள் தீவைத்ததால், மற்ற மாவட்டங்களுக்கும் போராட்டம் பரவத்தொடங்கியுள்ளது. இதனால், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக, மாநில அரசுக்கு உதவும் வகையில் சுமார் 5 ஆயிரம் துணை ராணுவ படை வீரர்கள் மத்திய அரசின் சார்பில், மணிப்பூர் மாநிலத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், துணை ராணுவப்படையை அனுப்புவது மாநிலத்தின் பிரச்சனைக்கு தீர்வு காணும் வழி இல்லை என்று தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பான அவர் வெளியிட்டுள்ள பதிவில், "மணிப்பூரில் மேலும் 5 ஆயிரம் மத்திய ஆயுதப்படை காவலர்களை குவிப்பது அம்மாநில பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கான வழியல்ல.
முதல்-மந்திரி பைரன் சிங்தான் மணிப்பூர் பிரச்னைக்கு காரணம் என ஒப்புக்கொண்டு அவரை பதவியில் இருந்து நீக்குவதே அறிவார்ந்த செயல். உண்மையான மாநில சுயாட்சி இருந்தால்தான் மெய்தி, குக்கி-சோ, நாகா மக்கள் மணிப்பூரில் ஒற்றுமையாக வாழ முடியும் என்ற புரிதல் அவர்களுக்கு வர வேண்டும். பிரதமர் மோடி பிடிவாதத்தை விட்டுவிட்டு மணிப்பூருக்குச் சென்று அம்மக்களின் கஷ்டங்களையும், கோரிக்கைகளையும் பணிவுடன் கேட்டறிவதே சிறந்த அரசியல் பண்பாக இருக்கும்" என்று பதிவிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“