"பன்முகம் கொண்ட இந்திய ஜனநாயகத்தின் அடிப்படை தூண்கள் வரலாறு காணாத வகையில் தாக்குதலுக்கு உள்ளாகி வருவதாக நான் உணர்கிறேன். வரக்கூடிய நாட்களில் இத்தாக்குதல் அதிகரித்து இந்தியாவின் பன்முகத்தன்மை கடும் சோதனைகள் சந்திக்கும் என்றும் கருதுகிறேன்"என்று கடந்த ஆண்டு தனது ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டு ஐஏஎஸ் பணியைத் துறந்த சசிகாந்த் செந்தில், இன்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
தமிழக மக்களோடு அவர்களின் சேவையில் எனது இறுதிமூச்சு வரை தமிழகத்தில் அடிப்படை விழுமியங்களை காப்பதற்காக போராட வேண்டும் என்று முடிவெடுத்துள்ளேன். மக்களுக்காக பணியாற்றுவதையே நான் எப்போதும் விரும்பியிருக்கிறேன். காங்கிரஸ் கட்சியில் இணைந்த பின்னரும் அதையே தொடர்ந்து செய்வேன் என்று முன்னதாக சசிகாந்த் செந்தில் முன்னதாக தெரிவித்தார்.
கட்சியில், இணைந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சசிகாந்த் செந்தில், " மக்களுடன் நின்று பணி செய்த நான், இனி வரும் காலங்களிலும் காங்கிரஸ் கட்சி சார்பாக மக்களுடன் நின்று பணி செய்வேன்" என்று தெரிவித்தார்.
கரூர் பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, தனது ட்விட்டரில், " இன்று காங்கிரஸ் கட்சியில் இணைந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில்
அவர்களை வரவேற்கிறோம். ஐஏஎஸ் தேர்வில் தமிழக அளவில் முதலிடம் பெற்றவர். மக்களிடம் நேர்மையான,திறமையான அதிகாரி என்று பெயரெடுத்தவர். மோடி /பிஜேபியின் மக்கள்விரோத போக்கை கண்டித்து, போராட பதவியைத் துறந்தவர்.
ரெய்ச்சூர்,ஷிமோகா மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியராக பணியாற்றினார்.அங்கு அவர் நேர்மையாகவும் துணிச்சலாகவும் பணியாற்றியதால் மக்கள்மத்தியில் நற்பெயர் கிடைத்தது. இதனிடையே, அவரை பணியிட மாற்றம் செய்ய அரசாங்கம் முயற்சித்தபோது, அதற்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தியது வியப்பை ஏற்படுத்தியது.
2017-ம் ஆண்டு தட்சின கன்னட மாவட்டத்தில் இருபிரிவினர் தொடர்ந்து மோதிக் கொண்டே இருந்ததால் அடிக்கடி மதக் கலவரம் ஏற்பட்டது. அதைத் தடுப்பதற்காக அவர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார். கிராமங்கள், கல்வி நிலையங்கள் தோறும் சமூக நல்லிணக்கக் கூட்டம் நடத்தி மத ரீதியான மோதலை தடுத்தார். 2019, செப் 6 மா.ஆட்சியர் பதவியை ராஜினாமா செய்தார் " என்று தெரிவித்தார்.