மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியுமான சந்தோஷ்பாபு மற்றும் மநீம சார்பில் மதுரவாயல் தொகுதியில் போட்டியிட்ட பத்ம பிரியா இருவரும் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளனர்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவடைந்ததைத் தொடர்ந்து, கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து நிர்வாகிகள் அடுத்தடுத்து வெளியேறி வருகின்றனர். கடந்த வாரம், மக்கள் நீதி மய்யத்தின் முக்கிய நிர்வாகியான மகேந்திரன் மௌரியா ஐபிஎஸ், பொன்ராஜ் ஆகியோர் கூண்டோடு வெளியேறினார்கள்.
இந்த நிலையில், முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தோஷ் பாபு தனிப்பட்ட காரணங்களுக்காக மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அதே போல, நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் சென்னை மதுரவாயல் தொகுதியில் போட்டியிட்ட பத்ம பிரியாவும் கட்சியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தோஷ் பாபு தான் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகுவதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இது குறித்து சந்தோஷ் பாபு தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: “நண்பர்களே வணக்கம், நான் மக்கள் நீதி மய்யத்தில் இருந்து எனது பதவியையும் உறுப்பினர் பொறுப்பையும் ராஜினாமா செய்கிறேன் என்பதை கணத்த இதயத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். என்னுடைய தனிப்பட்ட காரணங்களுக்காக என்னுடைய இந்த முடிவு எடுக்கப்பட்டது. கமல் சாருக்கும் குழுவினருக்கும் நண்பர்களுக்கும் அவர்களுடைய அன்புக்காக நன்றி.” என்று தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தோஷ் பாபு மக்கள் நீதி மய்யத்தில் இருந்து விலகுவதாக அறிவித்த ஒரு மணி நேரத்தில், மநீம சார்பில் சென்னை மதுரவாயல் தொகுதியில் போட்டியிட்ட பத்ம பிரியாவும் மக்கள் நீதிமய்யம் கட்சியில் இருந்து விலகுவதாக தெரிவித்தார்.
பத்ம பிரியா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: “அன்பு நிறைந்த மதுரவாயல் தொகுதி மக்களுக்கு.. என் மீது நம்பிக்கை கொண்டு எனக்கு வாக்களித்த மக்கள் அனைவருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன். என்னைப் போல் எவ்வித அரசியல் பின்புலம் இல்லாத ஒரு நடுத்தர குடும்பப் பெண்ணை உங்கள் வீட்டுப்பிள்ளையாக எண்ணி ஏற்றுக்கொண்டு வாக்களித்தமைக்கும் நம்பிக்கை கொடுத்து ஊக்கம் கொடுத்தமைக்கும் நான் என்றும் உங்களுக்கு கடமைப்பட்டுள்ளேன். சில காரணங்களுக்காக நான் சார்ந்திருந்த மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகுவதாக முடிவு செய்துள்ளேன். அதை எனது தொகுதி மக்களான உங்களுடன் பகிர்வது எனது கடமை என்று கருதி தெரிவித்துக்கொள்கின்றேன். எனது களப்பணி எப்போதும் போல இன்னும் சிறப்பாக தொடரும்.” என்று தெரிவித்துள்ளார்.
நேர்மையான ஐ.ஏ.எஸ் அதிகாரியாக அறியப்பட்ட சந்தோஷ் பாபு தமிழ்நாடு ஃபைபர் நெட் கார்ப்பரேஷன் நிர்வாக இயக்குனராக இருந்தார். அவர் ஓய்வு பெறுவதற்கு இன்னும் 8 ஆண்டுகள் இருந்த நிலையில், கடந்த ஆண்டு ஆகஸ் மாதம் விருப்ப ஓய்வு பெற்றார். இதையடுத்து, டு சென்னை ஆஃபிஸர்ஸ் ஐ.ஏ.எஸ் அகாடமியில் முழு நேர ஆசிரியராக இணைந்தார். பின்னர், கடந்த டிசம்பர் மாதம் மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார். மக்கள் நீதி மய்யத்தில் அவருக்கு பொதுச் செயலாளர் பதவி அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வேளச்சேரி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். இந்த நிலையில், தனிப்பட்ட காரணங்களுக்காக மநீம-வில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.