கர்நாடகா மாநிலத்தில் ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றிய ஒருவரும் ஐபிஎஸ் அதிகாரியகா பணியாற்றிய ஒருவரும் தமிழக அரசியலில் தற்போது கவனத்தைப் பெற்றுள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த சசிகாந்த் செந்தில் கர்நாடகாவில் ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றினார். 2019ம் ஆண்டு தனது பதவியை ராஜினாமா செய்தார். அப்போது அவர், மத்திய பாஜக அரசின் வெறுப்பு அரசியலுக்கு எதிராக ஐஏஎஸ் பதவியை ராஜினாமா செய்ததாக அவர் விளக்கம் அளித்தார். அதன் பிறகு, பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றார். அதற்குப் பிறகு, அவர் 2020ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இதையடுத்து, அவரைப் பற்றிய செய்திகள் பெரிய அளவில் எதுவும் வெளியாகவில்லை.
அதே போல, தமிழகத்தைச் சேர்ந்த அண்ணாமலை கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றினார். பின்னர், தனது நெருக்கிய நண்பரின் மரணத்துக்கு பிறகு பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழகத்தில் ஓய்வில் இருந்தார். ரஜினி தொடங்கவிருந்த அரசியல் கட்சியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆகஸ்ட் மாதம் 2020ல் அண்ணாமலை பாஜகவில் இணைந்தார். இதையடுத்து, அவர் தமிழக பாஜகவில் மாநில துணை தலைவராக நியமிக்கப்பட்டார். 2021ல் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார்.
இதனிடையே, தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகன் மத்திய அமைச்சரானதைத் தொடர்ந்து, அண்ணாமலை பாஜகவின் மாநில தலைவராக நியமனம் செய்யப்பட்டார். இந்த சூழலில்தான், தமிழக அரசியலில் ஒரு பேச்சு எழுந்தது. ஐபிஎஸ் அதிகாரி பணியை ராஜினாமா செய்துவிட்டு வந்து பாஜகவில் இணைந்த அண்ணாமலைக்கு அந்த கட்சி தலைமை மாநில தலைவர் பதவி வழங்குகிறது. அதே போல, மத்திய பாஜக அரசின் வெறுப்பு பிரசாரத்துக்கு எதிராக தனது ஐஏஎஸ் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வந்து காங்கிரஸில் இணைந்த சசிகாந்த் செந்திலை காங்கிரஸ் கண்டுகொள்ளவே இல்லை. இப்படி இருந்தால் காங்கிரஸ் எப்படி வளரும் என்று தமிழக அரசியலில் விவாதங்கள் எழுந்தன.
இந்த நிலையில்தான், தமிழ்நாடு காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளராக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் நியமிக்கப்பட்டுள்ளார் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தனது சமூக ஊடகப் பக்கத்தில் குறிப்பிடுகையில், “சமூக ஊடகம், முன்னணி அமைப்புகள் மற்றும் துறைகள், பயிற்சி முகாம் நடத்துவது குறித்த பணிகள் சிறப்பாக அமைந்திட, அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் ஒப்புதலோடு, தமிழ்நாடு காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளராக முன்னாள் ஐஏஎஸ் சசிகாந்த் செந்தில் நியமிக்கப்பட்டுள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மேற்கண்ட துறைகளை சார்ந்தவர்கள் இவருக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.” என்று அறிவித்துள்ளார்.
ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் தமிழ்நாடு காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டதன் பின்னணி குறித்து காங்கிரஸ் கட்சி வட்டாரத்தில் பேசினோம். பாஜக அண்ணாமலைக்கு மாநில தலைவர் பதவி அளித்ததால் சசிகாந்த் செந்திலுக்கு பதவி அளிக்க வேண்டும் என்ற நிர்பந்தத்தின் பேரில் காங்கிரஸ் கட்சி அவருக்கு பதவியை அளித்ததா என்று கேள்வி எழுப்பினோம். இது குறித்து காங்கிரஸ் கட்சியின் நெருக்கமான வட்டாரம் கூறியதாவது: “அப்படி இல்லை. சசிகாந்த் செந்தில் முதலில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தபோது, நான் முதலில் காங்கிரஸ் கட்சியில் 2 ஆண்டுகள் இருந்து காங்கிரஸின் சித்தாந்தம் என்ன என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். என்னைப் பொறுத்தவரை பதவி என்பது ஒரு சர்டிஃபிகேட் மாதிரி. நான் இப்போதுதான் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்திருக்கிறேன். ஒரு தேர்வுகூட எழுதாமல் எனக்கு சர்டிஃபிகேட் கொடுக்கிற மாதிரி பதவியைக் கொடுக்கிறேன் என்று சொன்னால், நான் இங்கே வந்ததுக்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும். என்னையும் அண்ணாமலையையும் ஒப்பிட்டுப் பார்க்கும் அந்த பார்வையை தயவு செய்து தவிர்த்துவிடுங்கள். நான் அடுத்த தலைமுறையைப் பற்றி கவலைப்பட்டுதான் பதவியை உதறிவிட்டு வந்தேன். மோடியின் ஆட்சி இப்போது எந்த வழியில் செல்கிறது என்பதை உணர்ந்தவன் நான். மோடி ஆட்சி தொடர்ந்தால், அடுத்த தலைமுறைக்கு எல்லோருக்கு கல்வி கிடைக்குமா என்பது கேள்விகுறி. கல்வி தனிப்பட்ட நபர்களுக்கானதாகிவிடும். அப்படியான பாஜகவின் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் இடத்தில் இருந்ததால்தான் நான் மனம் ஒப்பாமல்தான் நான் வெளியே வந்தேன்.
எனக்கு பதவியைக் கொடுத்து கொச்சைப்படுத்தாதீர்கள். காங்கிரஸ் கட்சியின் சித்தாந்தம் என்ன என்று தெரிந்துகொள்வதற்கு ஒரு 6 மாதங்கள் ஆகும் என்று சொல்லி தனக்கு பதவி வேண்டாம் என்று அவர் கட்சியில் இணைந்தபோதே வேண்டாம் என்று சொன்னார்” என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
சசிகாந்த் செந்திலின் பணி என்னவாக இருக்கும் என்று கேள்வி எழுப்பியபோது, காங்கிரஸ் வட்டாரங்கள் கூறியதாவது: “இப்போதுகூட அவருக்கு கொடுத்திருக்கிற பதவி தாய் அமைப்பில் இல்லை. காங்கிரஸில் உள்ள துணை அமைப்புகள் எல்லாம் தாறுமாறாக போய்க்கொண்டிருக்கின்றன. இந்த துணை அமைப்புகளை ஒழுங்குபடுத்தி செயல்படுத்துவதற்காக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான சசிகாந்த் செந்தில் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இது ராகுல் காந்தி, தினேஷ் குண்டுராவ், கே.எஸ். அழகிரியின் முடிவு. விரைவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் துணை அமைப்புகளுக்கான பயிற்சி நடைபெற உள்ளது. அதற்கு பிறகு, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் துணை அமைப்புகள் புத்துணர்ச்சியுடன் செயல்படும் பாருங்கள்” என்று நம்பிக்கை தெரிவித்தனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.