சமூக சமத்துவப்படை கட்சி நிறுவனரும் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான ப.சிவகாமி நகப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளித்ததையடுத்து, அவருக்கு சென்னையில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ப.சிவகாமி சென்னையின் மேயர் வேட்பாளர் என்று பேச்சுகள் எழுந்துள்ளன.
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி மாநிலம் முழுவதும் ஒரே கட்டமாக நடைபெறுகிறது. மாநிலத்தில் ஆளும் திமுகவும் எதிர்க்கட்சியான அதிமுகவும் தங்கள் கூட்டணி கட்சிகளுக்கு இடங்களை ஒதுக்கி வேட்பாளர்களை அறிவிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
அதிமுக கூட்டணியில் சீட் பங்கீடு பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு எட்டப்படாததால், கூட்டணியில் இருந்து விலகி பாஜக தனித்து போட்டியிடுவதாக அறிவித்தது. கூட்டணியில் இருந்து பாஜக வெளியேறிய நிலையில், அதிமுக கூட்டணியில் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியான ப.சிவகாமியின் சமூக சமத்துவப் படை அதிமுக கூட்டணியில் இணைந்துள்ளது. அதுமட்டுமல்ல, அதிமுகவில் அவருடைய கட்சிக்கு சென்னை மாநகராட்சியில் ஒரு வார்டில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் ப.சிவகாமி போட்டியிடுகிறார் என்பதை தெரிவித்துள்ளார்.
அதிமுக தலைமை பெருநகர சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளுக்கான வேட்பாளர் பட்டியலை செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. அதில், 12 முன்னாள் கவுன்சிலர்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், அதிமுக எம்.எல்.ஏ.க்களின் உறவினர்களுக்கும் சீட் வழங்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியின் 99வது வார்டில் சுயேச்சையாக போட்டியிடும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ப.சிவகாமிக்கு அதிமுக சார்பில் சீட் அளிக்கப்பட்டுள்ளது.
அதிமுக சென்னை மாநகராட்சியில் ப.சிவகாமிக்கு ஒதுக்கியுள்ள 99வது வார்டு அண்ணா நகர் மண்டலத்தில் வருகிறது. முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியான் சிவகாமி அதிமுக கூட்டணியில் இணைந்து போட்டியிடுவதால் அவர், அதிமுகவில் சென்னை மேயர் வேட்பாளர் என்று பேச்சுகள் எழுந்துள்ளன.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், மாநகராட்சி மேயர் பதவிகள் கவுன்சிலர்களால் மறைமுகமாகத் தேர்ந்தேடுக்கப்படுவதால் அதிமுகவில் மேயர் வேட்பாளரை இன்னும் அறிவிக்கவில்லை. ஆனால், ப.சிவகாமி அதிமுகவின் மேயர் வேட்பாளராக அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
அதிமுக கூட்டணியில் சென்னை மாநகராட்சியில் போட்டியிடுவது குறித்தும் அவர் அதிமுகவின் மேயர் வேட்பாளரா என்பது குறித்தும் ஊடகங்களில் ப.சிவகாமி கூறுகையில், “மேயர் வேட்பாளராக இருந்தால் மகிழ்ச்சிதான். இருந்தாலும், அதிமுக மேலிடம் இதை உறுதிப்படுத்த வேண்டும். அதை நான் சொல்ல முடியாது.
ஏற்கெனவே, எனக்கு எம்.பி., எம்.எல்.ஏ. தேர்தலில் போட்டியிட்ட அனுபவம் இருக்கிறது. ஆனால், சென்னை மாநகராட்சி தேர்தலில் முதல் முறையாக போட்டியிடுகிறேன். நான் சென்னையில் 77, 99, 196 ஆகிய வார்டுகளில் ஏதாவது ஒன்றை ஒதுக்குமாறு கேட்டேன். அதிமுக தலைமை எனக்கு 99வது வார்டை ஒதுக்கி உள்ளது. இந்த வார்டில் எனக்கு அறிமுகமானவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அதனால், தேர்தலை எளிதாக சந்திக்கும் நம்பிக்கை உள்ளது. அதிமுக என்னை மேயர் வேட்பாளராக அறிவித்தால் மகிழ்ச்சிதான், அதற்கு முன்னதாக நான் கவுன்சிலர் தேர்தலில் வெற்றி பெற வேண்டும். அதிமுக அதிக வார்டுகளை கைப்பற்ற வேண்டும். அதற்கு முன்னதாக, மேயர் வேட்பாளர் என பேசுவது முறையல்ல.
பிப்ரவரி 3ம் தேதி வேட்புமனுதாக்கல் செய்கிறேன். கூட்டணி கட்சி பொறுப்பாளர்களை சந்தித்து அவர்களின் ஆலோசனையின் பேரில் பிரசாரத்தில் ஈடுபடுவேன்.” என்று தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியான ப.சிவகாமி ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி மட்டுமல்ல, சிறந்த எழுத்தாளரும் ஆவார். பழையன கழிதல், ஆனந்தாயி உள்ளிட்ட நாவல்களை எழுதியுள்ளார். பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவரான ப.சிவகாமி, சமூக சமத்துவப்படை கட்சியின் நிறுவனராக உள்ளார். தலித் மக்கள் பிரச்னைகளிலும், பெண்கள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களின் பிரச்னைகளில் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.