இந்தியன் வங்கியின் முன்னாள் தலைவரும், தமிழ்நாடு யாதவ மகாசபை தலைவருமான எம்.கோபாலகிருஷ்ணன் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 86.
இந்தியன் வங்கியின் முன்னாள் தலைவரும், தமிழ்நாடு யாதவ மகாசபை தலைவருமான எம்.கோபாலகிருஷ்ணன் முதுமை காரணமாக நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டு இருந்த நிலையில், அவர் நேற்று (செப்டம்பர் 30) மாலை மைலாப்பூரில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவரது இறுதி சடங்குகள் இன்று மாலை பெசன்ட் நகரில் நடைபெற்றது.
இந்தியன் வங்கியின் முன்னாள் தலைவர் எம்.கோபாலகிருஷ்ணன் மறைவுக்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, பி.எம்.கே தலைவர் எஸ்.ராமதாஸ், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் பல அரசியல் தலைவர்கள் அவரது குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
முதல்வர் பழனிசாமி, எம்.கோபாலகிருஷ்ணன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில், “இந்தியன் வங்கியின் முன்னாள் தலைவரும், தமிழ்நாடு யாதவ மகா சபை தலைவருமான கோபாலகிருஷ்ணன் 30.9.2020 அன்று உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியை அறிந்து நான் வேதனை அடைந்தேன். கோபாலகிருஷ்ணனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்து கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
அதே போல, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்தியன் வங்கியின் முன்னாள் தலைவர் கோபாலகிருஷ்ணன் இயற்கை எய்திய செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் துயரமும் அடைந்தேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நபர்களுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் எனது வருத்தத்தையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று இரங்கல் தெரிவித்துள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"