மி டூ விவகாரத்தில் கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி வெளியிட்டிருக்கும் குற்றச்சாட்டுகள் குறித்து முன்னாள் ஐ.பி.எஸ் திலகவதி கருத்து தெரிவித்துள்ளார்.
பாலியல் வன்கொடுமைக்கு எதிராக மி டூ என்ற பிரச்சாரம் ஒன்று இந்தியா முழுவதும் சூடு பிடித்துள்ளது. இந்த விவகாரத்தில் பாலிவுட் பிரபல நடிகர் நானா படேகர் முதல் தமிழ் திரையுலக பாடலாசிரியர் வைரமுத்து வரை பலர் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குறிப்பாக வைரமுத்து குறித்து சின்மயி பல்வேறு குற்றச்சாட்டுகளை பலர் சார்பாக கூறி வருகிறார்.
இந்த குற்றச்சாட்டுகளுக்கு வைரமுத்து மறுப்பு தெரிவித்துள்ளார். இருப்பினும், அவர் உண்மை கூறுகிறாரா அல்லது பொய் கூறுகிறாரா என்று, உண்மை கண்டறியும் பரிசோதனை எடுக்க வேண்டும் என்று சின்மயி வலியுறுத்தினார்.
இந்த விவகாரத்தில் தற்போது முன்னாள் ஐ.பி.எஸ் திலகவதி கருத்து தெரிவித்துள்ளார். இந்த கருத்தில் சின்மயிக்கு ஆதரவாகவும், வைரமுத்து மீது நடவடிக்கை எடுக்க ஏன் தயங்க வேண்டும் என்றும் கேட்டுள்ளார்.
வைரமுத்துவுக்கு எதிராக திலகவதி கருத்து :
“வைரமுத்து மீது ஏன் நடவடிக்கை எடுக்க தயங்குகிறார்கள் என்று தெரியவில்லை. அவர் ஏதாவது கட்சியில் அடிப்படை உறுப்பினராக இருக்கிறாரா? ஏதேனும் பொறுப்பில் இருக்கிறாரா? இல்லையே. பணத்துக்காக பாடல் எழுதுபவர் தானே? பிறகு ஏன் அவரை விசாரிக்க கூடாது?
வைரமுத்து தன் மீது வைக்கப்பட்ட குற்றசாட்டுகளுக்கு காலம்தான் பதில் சொல்லும் என்கிறார். காலமா சின்மயிக்கு பாலியல் துன்புறுத்தல் தந்தது? இப்படி ஒரு பதிலை சொல்லிவிட்டு ஒதுங்கலாமா? சம்பந்தப்பட்டவர்கள் தானே பதில் சொல்லவேண்டும்?
வைரமுத்து ஒரு பெரிய மனிதர் என்று சொல்லிக் கொள்கிறார். அதை நாங்கள் தான் சொல்லவேண்டும். பிரபலமானவர்கள் எல்லாம் பெரிய மனிதர்கள் கிடையாது. அழகாக பேசினாலே அதற்கு மயங்கக் கூடியவர்கள் தமிழர்கள்.
அதுபோன்ற போக்கு தான் இது சின்மயி விஷயத்தில் அரசியல் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை. சின்மயி ஏன் காவல்துறைக்கு செல்ல தாமதிக்கிறார் என்றும் தெரியவில்லை. சின்மயி விஷயத்தில் யாராவது ஒரு நீதிபதி தானே முன்வந்து கையில் எடுத்து விசாரிக்க வேண்டும்.
இது இன்னும் வழக்காக மாறாமல் இருப்பது எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. சின்மயி தாமதமாக புகார் சொல்வதை குறை சொல்ல முடியாது. சம்பவம் நடந்தபோது அவருக்கு 17, 18 வயது தான். அந்த சூழலில் அவர் குழப்ப நிலைக்கு தான் சென்றிருப்பார். இப்போது அவருக்கு வயது காரணமாக பக்குவம் வந்திருக்கலாம்.
பெண்ணுக்கு தீங்கு நடக்கும்போது அவள் அதை சத்தமாக வெளியில் கொண்டு வரவேண்டும். இதில் வெட்கப்பட வேண்டியவர் அந்த குற்றத்தை செய்தவர்தானே தவிர பாதிக்கப்படும் பெண்கள் அல்ல என்பது புரிய வேண்டும். சமூக வலைதளங்களில் இதை பகிர்வதால் நிச்சயம் தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறேன்.
அரசாங்கமும் இதற்கு இன்னும் உதவ வேண்டும். ஜெயலலிதா இருந்தபோது இதுபோன்ற புகார்களை எடுத்து சென்று இருந்தால் உடனடியாக நடவடிக்கை எடுத்து இருப்பார்.” என்று கூறியுள்ளார்.