இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தின் (ISRO) புதிய தலைவர் வி. நாராயணன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கிரையோஜெனிக் தொழில்நுட்பத்தில் இந்தியாவின் நம்பிக்கைக்குரிய நபர்களில் அவரும் ஒருவராக கருதப்படுகிறார்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: ‘He’s like me, rose from poverty to the top’: Former ISRO chief K Sivan on new chairman V Narayanan
சந்திரயான் -2 தோல்விக்கு வழிவகுத்த சிக்கல்களைக் கண்டறிந்தது சில திருத்தங்களை கூறி, சந்திரயான் -3 வெற்றிகரமாக தரையிறங்குவதற்கு வழிவகுத்தவர்களில் நாராயணனும் ஒருவராக திகழ்கிறார்.
ராக்கெட் என்ஜின்கள் மற்றும் செயற்கைக்கோள்களின் உந்துவிசை வடிவமைப்புகளை உருவாக்கி மேம்படுத்துவதில், திருவனந்தபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும், திரவ உந்து அமைப்பு மையத்தில், அதிக நாட்கள் பணியாற்றிய அனுபவம் நாராயணனுக்கு இருக்கிறது. இவர் கடந்த செவ்வாய்க்கிழமையன்று இஸ்ரோவின் 11-வது தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது தலைவராக உள்ள சோம்நாத்தின் பதவிக்காலம் வரும் ஜனவரி 14-ஆம் தேதியுடன் நிறைவடைவது குறிப்பிடத்தக்கது.
1984 இல் இஸ்ரோவில் சேர்ந்த நாராயணன், கிரையோஜெனிக் என்ஜின்களின் உள்நாட்டு வளர்ச்சியில் ஈடுபட்டுள்ள முக்கிய நபர்களில் ஒருவராக இருந்து வருகிறார். கிரையோஜெனிக் என்பது மிகக் குறைந்த வெப்பநிலையில் உள்ள பொருட்களின் செயல்பாடு தொடர்பான அறிவியலாகும். ராக்கெட்டுகளின் எரிபொருளாக ஹைட்ரஜனை திரவ வடிவில் பயன்படுத்துவதற்கு கிரையோஜெனிக் என்ஜின்கள் உதவுகிறது. இத்தகைய கிரையோஜெனிக்ஸ் துறையில் நாராயணன் நுழைந்தது தற்செயலானது.
"நாராயணன் இஸ்ரோவில் சேர்ந்தபோது, ஃபைபர்-கிளாஸ் பிரிவில் வேலை செய்ய நியமிக்கப்பட்டார். விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தைச் சேர்ந்த எனது சக ஊழியர் டாக்டர் எஸ் ராமகிருஷ்ணா, உந்துவிசையில் வேலை செய்ய ஆர்வமுள்ள ஒரு ஆற்றல் மிக்க இளைஞருக்கு இடமளிக்க முடியுமா என்று என்னிடம் கேட்டது எனக்கு நினைவிருக்கிறது. நான் உந்துவிசை குழுவின் தலைவராக இருந்தேன். அப்போது, நாராயணன் தான் பரிந்துரைக்கப்பட்டார். அந்த நாட்களில் நாங்கள் கிரையோ என்ஜின் வேலைகளை ஆரம்பித்திருந்தோம். நாராயணன் என்னிடம் வந்து, உந்துவிசை அமைப்புகளில் வேலை செய்ய மிகவும் ஆர்வமாக இருப்பதாகக் கூறினார். அவரை நான் குழுவில் சேர்த்தேன்" என கிரையோஜெனிக் என்ஜின் திட்டத்தின் முன்னாள் இயக்குநரும், நாராயணனின் மென்டாருமான வாசுதேவ் ஞான காந்தி, தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறினார். வாசுதேவ் ஞான காந்தி கடந்த 2006-ஆம் ஆண்டு இஸ்ரோவில் இருந்து ஓய்வு பெற்றார். இப்போது தனியார் விண்வெளி நிறுவனமான ஸ்கைரூட்டின் மூத்த துணைத் தலைவராக வாசுதேவ் ஞான காந்தி பதவி வக்கிறார். இந்நிறுவனம் சொந்தமாக ராக்கெட்டுகளை உருவாக்குகிறது.
"ஆரம்ப நாட்களில் ஐஐடி காரக்பூரில், கிரையோஜெனிக் தொழில்நுட்பத்தின் அடிப்படை வசதி மட்டுமே இருந்தது. நாராயணன் மிகவும் ஆர்வமுள்ள பொறியாளர். அவரை ஐஐடி காரக்பூரில் இருந்து எம்டெக் படிக்குமாறு நான் பரிந்துரைத்தேன். அந்தத் துறையின் தலைவராக இருந்த இந்தியாவின் சிறந்த கிரையோஜெனிக் மேதையான சுனில் குமார் சாரங்கியை எனக்குத் தெரியும். நாராயணன் சேர்த்துக் கொள்ள முடியுமா என நான் சாரங்கியிடம் கேட்டேன். அந்த நாட்களில் விஷயங்கள் மிகவும் எளிதாக இருந்தன. நாராயணன் மிகச் சிறப்பாகச் பணியாற்றி எம்டெக்கில் முதலிடம் பிடித்தார்" என்றும் வாசுதேவ் ஞான காந்தி குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல், நாராயணன் குறித்து முன்னாள் இஸ்ரோ தலைவர் கே. சிவன் தனது நினைவலைகளை பகிர்ந்து கொண்டார். "நிறைய விஷயங்களில் எனக்கும், நாராயணனுக்கும் ஒற்றுமைகள் உள்ளன. நாங்கள் இருவரும் கிராமப்புற பிண்ணனியில் இருந்து வந்தவர்கள். எங்கள் இருவரின் குடும்பங்களும் ஏழ்மையான நிலையில் இருந்தன. இருவருமே அரசு பள்ளியில் தமிழ்வழிக் கல்வியில் பயின்றவர்கள். கடுமையாக முயற்சி செய்து இந்த உயரத்தை நாராயணன் எட்டியுள்ளார். இதன் மூலம் எங்களைப் போன்ற மனிதர்களும் உயர்வதற்கு நிறுவனம் வாய்ப்பு வழங்குவது தெரிய வருகிறது. திறமை மற்றும் கடின உழைப்பை தவிர வேறு எதுவும் இதற்கு காரணம் இல்லை" என சிவன் குறிப்பிட்டுள்ளார்.
"நாராயணனுக்கு இந்த பதவி கிடைத்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. இந்த பதவிக்கு அவர் மிகவும் சரியான நபர். அவரிடம் நிபுணத்துவமும், அனுபவம் வாய்ந்த தொலைநோக்கு பார்வையும் உள்ளது. அவர் கடினமாக போராடியுள்ளார். கிரையோஜெனிக் தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கு மகத்தான பங்களிப்பை நாராயணன் அளித்துள்ளார். இஸ்ரோவை அவர் புதிய உயரங்களுக்கு அழைத்துச் செல்வார்" என தி இந்திய எக்ஸ்பிரஸிடம் சிவன் தெரிவித்துள்ளார்.
நாராயணன், 2018-ஆம் ஆண்டு முதல் எல்.பி.எஸ்.சி-யின் இயக்குநராக உள்ளார். அவரது தலைமையின் கீழ், எல்.பி.எஸ்.சி தற்போது அடுத்த தலைமுறை ஏவுகணை வாகனத்தை (என்ஜிஎல்வி) உருவாக்கி வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.