ஏ.டி.ஜி.பி வெள்ளதுரை விவகாரத்தில், தமிழக அரசின் உள்துறையில் என்ன நடக்கிறது என்பதே முதல்வர் ஸடாலினுக்கு தெரியவில்லை என்று கூறியுள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், காவல்துறையை கைபொம்மையாக தூக்கிப்போட்டு விளையாடுவது தான் அரசின் வேலையா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்றுடன் முடிவடைந்துவிட்ட நிலையில், வரும் 4-ந் தேதி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நடைபெற உள்ளது. இதனால் இந்தியாவில் மீண்டும் மோடி ஆட்சி நீடிக்குமா அல்லது காங்கிரஸ் கட்சியின் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வருமா என்பது குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 7-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று முடிவடைந்த நிலையில், கருத்துக்கணிப்பு முடிவுகள் தற்போது வெளியாகி வருகிறது.
இந்தியா முழுவதும், நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ள நிலையில், தமிழகத்தில் தி.மு.க – அ.தி.மு.க இடையேயான மோதல் போக்கு வழக்கம்போல் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அதிலும் குறிப்பாக அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்திக்கும்போது, முதல்வர் ஸ்டாலின் குறித்தும், தி.மு.க. குறித்து கடுமையாக விமர்சித்து வருகிறார். அந்த வகையில் தற்போது ஏ.டி.எஸ்.பி வெள்ளதுரை விவகாரம் குறித்து பேசியுள்ளார்.
தமிழக காவல்துறையில் ஏ.டி.எஸ்.பி வெள்ளதுரை பணியில் இருந்து ஓய்வு பெறும் ஒருநாளுக்கு முன்னதாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, பின்பு அந்த உத்தரவு ரத்து செய்யப்பட்டது. கடந்த 2004-ம் ஆண்டு வீரப்பனை சுட்டுக்கொன்ற காவல்துறை குழுவில் இருந்த ஏ.டி.எஸ்.பி வெள்ளதுரை என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டாக இருக்கிறார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழகத்தில் ரவுடியிசம் அதிகம் இருக்கும் காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூர் பகுதிக்கு மாற்றப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டத்திற்கு மாற்றப்பட்ட வெள்ளதுறை, இன்று பணியில் இருந்து ஓய்வு பெற்றுள்ள நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு, அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் மூலம் அவருக்கு தெரிவிக்கப்பட்டது. கடந்த 2013-ம் ஆண்டு சிவகங்கை மாவட்டத்தில் நடந்த காவல்நிலையத்தில் ரவுடி ஒருவர் மரணமடைந்த சம்பவத்தில் வெள்ளதுரைக்கு தொடர்பு இருப்பதாக சி.பி.சி.ஐ.டி போலீசார் கூறியிருந்தனர்.
இதன் காரணமாக வெள்ளிக்கிழமை ஓய்வு பெற இருந்த வெள்ளதுரை ஒருநாள் முன்னதாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், உடனடியாக இந்த உத்தரவு ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இது குறித்து பேசியுள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஓய்வுக்கு ஒருநாள் முன்னதாக பணியிடை நீக்கம் இருக்க கூடாது என்று உச்சநீதிமன்றம் வலியுறுத்தியும் இப்படி நடந்துள்ளது.
ஏ.டி.எஸ்.பி வெள்ளத்துரை மீது நடவடிக்கை எடுத்தது யார்? அந்த உத்தரவை ரத்து செய்தது யார்? காவல்துறையை கைபொம்மையாக தூக்கி விளையாடுவது தான் அரசின் வேலையா? ஆழ்வார்பேட்டையிலேயே இருந்து இயங்கினால் இப்படித்தான் இருக்கும். இந்த அரசு மு.க. ஸ்டாலினுக்கு கீழ் இயங்கவில்லை என்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.