சமீபத்தில் அயோத்தி ராமர் கோயில் வழக்கின் தீர்ப்பு தொடர்பாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் கூறிய கருத்துக்கு பலரும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இந்த விவகாரத்தில், சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி சந்துருவும் தனது கருத்துகளை தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், அண்மையில் தான் கலந்து கொண்ட நிகழ்வு ஒன்றில் பேசும் போது, அயோத்தி ராமர் கோயில் வழக்கில் தீர்ப்பு வழங்குவதற்கு முன்பு தான் இறைவனிடம் வேண்டியதாக கூறியிருந்தார். அதாவது, சில நேரங்களில் தீர்ப்பளிக்க வேண்டிய வழக்குகளில் தங்களால் முடிவு எடுக்க முடியாத சூழல் நிலவும் என அவர் கூறியிருந்தார். அயோத்தி ராமர் கோயில் வழக்கும் அது போன்று இருந்ததாக குறிப்பிட்டுள்ள அவர், அந்த வழக்கு தனக்கு முன்பு சுமார் மூன்று மாதங்கள் இருந்ததாக தெரிவித்துள்ளார். மேலும், வழக்கின் தீர்ப்பு வழங்க தனக்கு வழிகாட்ட வேண்டுமென தான் இறைவனிடம் பிரார்த்தனை செய்ததாகவும் கூறியிருந்தார். குறிப்பாக, கடவுள் மீது நமக்கு நம்பிக்கையிருந்தால், அவர் நமக்கு வழிகாட்டுவார் எனவும் சந்திரசூட் கூறியுள்ளார்.
சந்திரசூட்டின் இந்த கருத்துக்கு பலரும் தங்கள் கண்டனத்தை பதிவு செய்தனர். குறிப்பாக, உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி வகிக்கும் ஒருவர் எவ்வாறு இப்படி பேசலாம் எனவும் கேள்வி எழுப்பினர்.
இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி சந்துரு, இந்த விவகாரம் தொடர்பாக தனது கருத்தை பதிவு செய்துள்ளார். அதன்படி, “கடவுள் அருளால் தீர்ப்புகள் பெறப்படுகின்றன என்றால், மோசமான தீர்ப்புகளையும் கடவுள்தான் வழங்குகிறாரா? அரசியலமைப்பு சட்டத்தை விருப்பு வெறுப்பின்றி அச்ச உணர்வின்றி ஏந்திப் பிடிப்போம் என எடுத்துக் கொண்ட உறுதிமொழியை நீதிபதிகள் மறந்துவிடுவதே இதுபோன்ற சர்ச்சைகளுக்கு காரணம்” என சந்துரு குறிப்பிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“