நடிகர் ரஜினிகாந்த் ஜனவரியில் அரசியல் கட்சி தொடங்கப்படும் டிசம்பர் 31ல் தேதி அறிவிக்கப்படும் என்று அரசியல் கட்சி தொடங்குவது பற்றி தெரிவித்தார். ரஜினி அரசியல் கட்சி தொடங்குவது குறித்து பெருநகர சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமி, “புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் வழியில் தொடரட்டும் ரஜினியின் பணி” என்று கூறி முதல் ஆதரவு தெரிவித்துள்ளார்.
பெருநகர சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜனவரியில் கட்சி துவக்கம், வருகின்ற டிசம்பர் 31ம் தேதி அறிவிப்பு என்று சொல்லி இருக்கிறார்.
இது சாதாரண அறிவிப்பு அல்ல. தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய திருப்பம் இது. 1972ல் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் கொண்டுவந்த மாற்றத்தை போல அமையக்கூடிய திருப்பத்தை சூப்பர் ஸ்டார் ரஜினி அறிவித்துள்ளார்.
கடந்த 2018ம் வருடம் மார்ச் 5ம் தேதி வேலப்பன் சாவடியில் எம்.ஜி.ஆர் திருவுருவச்சிலை திறப்பு விழாவிலே அவர், “என்னால் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் போல் நல்லாட்சியை, ஏழைகளுக்கான ஆட்சியை, சாமானியருக்கான ஆட்சியை, நடுத்தர வர்க்க குடும்பங்களுக்கான ஆட்சியை தர முடியும்” என்பதை ஆழ்ந்த நம்பிக்கையுடன் உறுதிபடச் சொல்லி இருந்தார்.
நல்ல திறமையான ஆசோகர்களையும் தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தி அத்தகைய ஒரு ஆட்சியைக் கொடுப்பேன் என்பதையும் சொல்லியிருந்தார். ஏழைகளுக்கான சாமானிய மக்களுக்கான புரட்சித் தலைவரின் ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் மலரச் செய்ய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முன்வந்திருப்பதை வரவேற்கிறேன்.
அவருக்கு எம்.ஜி.ஆருக்கு துனை நின்று ஆதரவளித்து திமுகவை வீழ்த்திய அனைவரும் ஆதரவு தருவார்கள் என்பது திண்ணம்.
கொரோனா நோய் தொற்றுக் காலத்தில் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் தமிழக மக்களின் நலனை மட்டுமே மனதில் கொண்டு அவர் முழுநேர அரசியலில் ஈடுபடுவது என்று முடிவு செய்திருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது, பாராட்டத்தக்கது.
“தமிழ்நாட்டின் தலை எழுத்தை மாற்றவேண்டிய நாள் வந்தாச்சு. நிச்சயம் அது நடக்கும்” என்ற ரஜினியின் நம்பிக்கையான வார்த்தையை வரவேற்று அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்” என்று சைதை துரைசாமி தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த் ஜனவரியில் அரசியல் கட்சி தொடங்குவேன் என்று அறிவித்த நிலையில், அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி ரஜினிக்கு முதல் ஆதரவாக தெரிவித்துள்ளார்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.