சுதந்திர போராட்ட தியாகி தீரன் சின்னமலை நினைவு தினத்தையொட்டி முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் சென்னையில் அவரது சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து, செய்தியாளர்கள் சீமான் குறித்து கேட்ட கேள்விக்கு, ‘அவர் தனது வாய்க்கொழுப்பை திமுகவிடம் காட்டிக் கொள்ளட்டும். அதிமுகவில் காட்டினால் அவ்வளவுதான். நடப்பதே வேறு. அவர் நடமாட முடியாது” என்று எச்சரிக்கை விடுத்தார்.
மேலும், ‘பிற்காலத்தில் அவரது கட்சிக்காரர்கள் அவருக்கு ஆமை சின்னத்தை சிலையாக வைப்பார்களா? எனவும் கேள்வியெழுப்பினார். இதற்கு பதிலளித்த சீமான், “எனக்கு வாய்க்கொழுப்பு, அவர்களுக்கு பணக் கொழுப்பு. தற்போது எந்தக் கொழுப்பு தேவைப்படுது” என்றார்.
மேலும், “ஜெயக்குமாரிடம் மரியாதை வைத்துள்ளேன். அதைக் அவர் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். இழக்க ஏதும் இல்லாதவனிடம் சவால் விடாதே என்றான் ஹிட்லர். என்னிடம் இழக்க ஏதுமில்லை, உயிரைத் தவிர” என்றார்.
தொடர்ந்து ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளாரே என்ற கேள்விக்கு, ‘இதே கேள்வியை மு.க. ஸ்டாலின் அல்லது பாஜகவிடம் கேட்டால் வீட்டுக்கு ரெய்டு வரும். நான் அவரை மதிக்கிறேன். அதனால் என்னிடம் சீண்டுகிறார்” என்றார்.
மேலும், ‘நானும் ஒரு இடத்துக்கு வருகிறேன். அவரும் அந்த இடத்துக்கு வரட்டும். சந்திப்போம்” என்றார்.
முன்னதாக, மறைந்த திமுக தலைவர் முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதிக்கு அவரது சமாதி அமைந்துள்ள இடத்தின் அருகில் கடலுக்குள் ரூ.81 கோடி செலவில் பேனா நினைவு சின்னம் அமைக்கவுள்ளதாக மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு அறிவித்தது.
இது தமிழ்நாட்டு அரசியலில் பல்வேறு சூடான விவாதங்களை கிளப்பியுள்ளது. இது குறித்து பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “கருணாநிதிக்கு பேனா சிலை, மு.க. ஸ்டாலினுக்கு விக், அண்ணாவுக்கு மூக்குப்பொடி, எம்ஜிஆருக்கு மூக்குக் கண்ணாடி என இப்படியே சிலை வைப்பார்களா? இது சேட்டைதானே” என்றார்.
அத்தோடு, ‘ஜெயலலிதா நடிகையாக இருந்தவர். ஆகையால் அவர் மேக்அப் செட் வைத்திருந்தார். அந்த மேக்அப் செட்டிற்கு ஒரு சிலை வைப்பார்களா? எனவும் கேள்வியெழுப்பி இருந்தார். இதுவே சீமான், ஜெயக்குமார் திடீர் மோதலுக்கு காரணம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil