திருக்கழுக்குன்றம் பேரூராட்சி அ.தி.மு.க செயலாளர் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய ஜெயக்குமார் உள்ளிட்ட அ.தி.மு.க-வினர் 200 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் பேரூராட்சி அ.தி.மு.க செயலாளர் தினேஷ்குமார் நேற்று முன் தினம் (பிப்ரவரி 25) வெட்டப்பட்டார். தன்னுடைய வீட்டு வாசலில் மது அருந்தியவர்களை தட்டிக் கேட்டதால், மது அருந்திய வினோத் மற்றும் கௌரிசங்கர் இருவரும் தினேஷ்குமாரையும் அவரது உறவினர் மோகனையும் வெட்டியதாக புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில், திருக்கழுக்குன்றம் பேரூராட்சி அ.தி.மு.க செயலாளர் தினேஷ்குமாரை வெட்டிய, வினோத், கௌரிசங்கர் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி அ.தி.மு.க செயலாளர் தினேஷ்குமார் வெட்டப்பட்டதற்கு, எதிர்க்கட்சித் தலைவரும் அ.தி.மு.க பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தி.மு.க ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது என்று கூறி கண்டனம் தெரிவித்தார்.
மேலும், அ.தி.மு.க பேரூராட்சி செயலாளர் வெட்டப்பட்டதைக் கண்டித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவித்திருந்தார். ஆனால், காவல்துறையினர் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்தனர்.
இந்நிலையில், அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த அ.தி.மு.க செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் எஸ். ஆறுமுகம் வீட்டின் முன்பு அ.தி.மு.க-வினர் குவிந்தனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
அதே போல, ஆர்ப்பாட்டம் நடத்த வந்த அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் வாகனத்தை திருக்கழுக்குன்றம் கொத்திமங்கலம் பகுதியில் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால், ஜெயக்குமார் உள்ளிட்ட அ.தி.மு.க-வினர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி இல்லை என்பதால் போராட்டத்தைக் கைவிடுமாறு போலீசார் கூறியதால் அ.தி.மு.க-வினருக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட அ.தி.மு.க-வினர் 200 பேர்களை போலீசார் கைது செய்தனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.