முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு தீர்ப்பை ஏற்கிறோம் என்றும் தி.மு.க நடத்தும் அனைத்து கட்சிக் கூட்டத்தில் அ.தி.மு.க சார்பில் யாரும் கலந்துகொள்ள மாட்டார்கள் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னை பட்டினம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், “முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறை தண்டனை அனுபவித்து வந்த 6 பேர் விடுதலை என்பது மகிழ்ச்சி அளிக்கக்கூடிய விஷயம்” என்று கூறினார்.
மேலும், 7 பேர் விடுதலைக்காக ஜெயலலிதா முதல்வராக இருந்த போது தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமை முதல்வராக இருந்தபோது 7 பேர் விடுதலைக்காக ஞாயிற்றுக்கிழமை என்றும் பாராமல் அமைச்சரவையைக் கூட்டி ஆளுநருக்கு அழுத்தம் கொடுத்து சட்ட நடவடிக்கை எடுத்ததாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய ஜெயக்குமார், “இந்த வெற்றியானது அ.தி.மு.க எடுத்த தொடர் நடவடிக்கைக்கு கிடைத்த வெற்றி. 7 பேரின் விடுதலைக்கு தி.மு.க எந்த முயற்சியும், சட்ட நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த வெற்றியை தங்களுக்கானது என்று தி.மு.க சொல்லிக் கொள்வது அபத்தம்.
தி.மு.க ஆட்சி தொடர்ச்சியாக தமிழர்களை வஞ்சித்து வருகிறது. நீட், ஹைட்ரோ கார்பன், மீத்தேன் ஆகிய திட்டங்கள் யாருடைய ஆட்சி காலத்தில் அனுமதி அளிக்கப்பட்டது.
முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பான விஷயத்தில் தி.மு.க பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டி விடுகிறது. 10 சதவீத இடஒதுக்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்” என்று கூறினார்.
மேலும், முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பாக நாளை முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடக்கவுள்ள அனைத்து கட்சிக்கூட்டத்தில் அ.தி.மு.க சார்பில் யாரும் கலந்துகொள்ள மாட்டார்கள். அ.தி.மு.க ஆட்சி காலத்தில் அரசு மீது அவதூறு தெரிவித்தோரை மிரட்டுவதற்காக, அவர்களை அடக்கி வைப்பதற்காக வழக்கு பதிவுகள் மட்டுமே செய்தோம். கைது செய்ததில்லை. ஆனால், தி.மு.க அரசானது தங்களை எதிர்த்து யாராவது குரல் கொடுத்தாலே, கருத்துக்கள் தெரிவித்தாலும் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்து வருகிறது.
தி.மு.க காரர்கள் மீது ஆதாரத்துடன் பல புகார்கள் கொடுக்கப்பட்ட போதும் அவர்கள் மீது மட்டும் வழக்கு பதிவும் செய்யப்படாது. கைது நடவடிக்கையும் எடுக்கப்படாது. எந்த தவறுமே செய்யாத தன்னை திடீரென வீட்டுக்கு உள்ளே புகுந்து கைது செய்தனர். கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டபோது அடுத்தடுத்து வழக்குகள் போடப்பட்டு மீண்டும் மீண்டும் கைது செய்தனர். ஏனென்றால், தி.மு.க மக்கள் விரோத அரசு” என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துப் பேசினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“