முன்னாள் அமைச்சர் கடலாடி சத்தியமூர்த்தி, வருமானத்துக்கு அதிகமான சொத்து குவித்த வழக்கில் 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவர் மனைவி சந்திராவுக்கு 2 ஆண்டுகளும் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தலா ரூ. 5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதா முதல்வராக இருந்த 1991ம் ஆண்டு முதல் 1996ம் ஆண்டு வரையிலான அமைச்சரவையில் இடம் பிடித்திருந்தார், ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி சட்டமன்ற உறுப்பினர் சத்தியமூர்த்தி. 97ம் ஆண்டு முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தி, அவரது மனைவி சந்திரா ஆகியோர் மீது வருமானத்துக்கு அதிகமாக ரூ.83.32 லட்சம் சொத்து சேர்த்ததாக வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த ஊழல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் கடந்த 2001 ஆம் ஆண்டு சத்தியமூர்த்தி மற்றும் அவரது மனைவி சந்திராவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிருப்பிக்கப்படவில்லை என இருவரையும் விடுதலை செய்து தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து இருவரும் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர். இதை எதிர்த்து லஞ்ச ஒழிப்பு போலீசார் மேல்முறையீடு செய்தனர்.
17 ஆண்டுகள் நடபெற்ற இந்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் இன்று திர்ப்பு வழங்கினார். அப்போது, முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்திக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், அவரது மனைவி சந்திராவுக்கு 2 ஆண்டுகள் தண்டனையும் விதித்தார். இருவருக்கும் தலா ரூ. 5 லட்சம் அபராதமும் விதித்தார்.
தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய உள்ளோம். எனவே சரணடைய அவகாசம் அளிக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் கோரிக்கையை ஏற்க நீதிபதி மறுத்துவிட்டார்.