விருதுநகரில் நடைபெற்ற அ.தி.மு.க பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, முக்குலத்தோர், தேவேந்திர குல வேளாளர், நாடார், நாயக்கர் சமுதாய இளைஞர்கள் கூடி வந்திருக்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி அனைத்து சமுதாயத்துக்கும் சொந்தக்காரர் என்று எடப்பாடி பழனிசாமிக்கு தெம்பூட்டும் விதமாக பேசினார்.
விருதுநகரில் நடைபெற்ற அ.தி.மு.க பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியதாவது: “நான் பேசும்போது எடப்பாடி பழனிசாமி சொல்வார், முதல் மெடிக்கல் காலேஜ் உன் ஊர்லதான். விருதுநகர்தான். உனக்குத்தான். நீ கேட்டதைக் கொடுப்போம். கேட்டதையெல்லாம் கொடுத்தார். 68 அம்மா மினி கிளினிக், எல்லாத்தையும் மூடிவிட்டார்கள். இப்போது வைரல் காய்ச்சல் வருகிறது. தலைவலி வருகிறது. எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் 2,000 மினி கிளினிக்குகளைக் கொண்டுவந்தார். அதில் 68 மினி கிளினிக் விருதுநகர் மாவட்டத்தில் அமைத்தார். இப்படி மினி கிளினிக்குளைத் தொடங்கியது எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி.
பிறகு ஏன் தோற்றோம் என்று நினைக்கிறோமா? கவனக்குறைவுதான். சில கவனக் குறைவில் விட்டுவிட்டோம். ஆனால், இன்று கட்சி நிர்வாகிகள் தெம்பாக எழுந்து நிற்கிறார்கள். எடப்பாடி பழனிசாமிக்கு எந்த ஜாதி மதமும் கிடையாது. முக்குலத்து சமுதாய இளைஞர்கள், தேவேந்திர குல வேளாளர் சமுதாய இளைஞர்கள், நாடார் சமுதாய இளைஞர்கள், தெலுங்கு பேசுகிற நாயகர் சமுதாய இளைஞர்கள் இங்கே கூடி வந்திருக்கிறீர்கள். இஸ்லாமிய சமுதாயம், கிறிஸ்தவ சமுதாயம் கூடிவந்திருக்கிறீர்கள். அத்தனை சமுதாயத்துக்கும் சொந்தக்காரர், அனைத்து சமுதாய மக்களுடைய நம்பிக்கைய நட்சத்திரம் எடப்பாடி பழனிசாமி. இங்கே பூச்சாண்டி காட்ட முடியாது. எடப்பாடி பழனிசாமி தென் மாவட்டத்துக்கு வருவாரா என்று யாரும் சொல்ல முடியாது.” என்று ராஜேந்திர பாலாஜி, எடப்பாடி பழனிசாமிக்கு தெம்பூட்டும் விதமாகப் பேசினார்.
இந்த கூட்டத்தில் அ.தி.மு.க-வின் இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் ராஜேந்திர பாலாஜி எடப்பாடி பழனிசாமிக்கு செங்கோல் அளித்தார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"