சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நீதிமன்றக் காவல் 47-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் செந்தில் பாலாஜி, போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி பணம் வாங்கி மோசடி செய்ததாக குற்றசாட்டு எழுந்தது.
இது தொடர்பாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கு தொடர்பாக, அமலாக்கத்துறை ஜூன் 13, 2023-ல் அவர் தொடர்புடைய இடங்களில் சோதனை செய்தது. இதையடுத்து, அமலாக்கத்துறையால் செந்தில் பாலாஜி ஜூன் 14-ம் தேதி அதிகாலை கைது செய்யப்பட்டார்.
செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு ஓராண்டைக் கடந்த நிலையில், தொடர்ந்து செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு வருகின்றன. செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க அமலாக்கத்துறை எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் ஜூலை 18-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் சிறையில் செந்தில் பாலாஜிக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“