வருகின்ற 9ஆம் தேதி அவிநாசியில் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவை கண்டித்து நடைபெறும் ஆர்ப்பாட்டம் தொடர்பாக கோவை மாவட்ட அதிமுக அலுவலகத்தில் ஆலோசணைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசுகையில், “ஆ.ராசா மோசமான வார்த்தைகளில் எம்.ஜி.ஆரை விமர்சித்துள்ளார்.
எம்.ஜி.ஆர். இருந்த வரை கருணாநிதியால் தலை தூக்க முடியவில்லை. யார் கட்சி ஆரம்பித்தாலும் எம்.ஜி.ஆர். பெயரை சொல்லாமல் அரசியல் செய்ய முடியாது. ஆ.ராசா பேச்சிற்கு எதிர்ப்பு கடுமையாக கிளம்பியுள்ளது.
ஸ்டாலின் எம்.ஜி"ஆரை தேர்தல் நேரத்தில் பெரியப்பா என்கிறார். ஆனால் ராசாவை அவர் கண்டிக்கவில்லை. திமுக ஆட்சிக்கு வர காரணம் எம்.ஜி.ஆர்.
திமுகவை வளர்த்த பெருமை எம்.ஜி.ஆரையே சேரும். எம்.ஜி.ஆரை மோசமாக பேசிய ஆ.ராசாவிற்கு நீலகிரி பாராளுமன்ற தொகுதி மக்கள் பாடம் புகட்டுவார்கள். நியாயம் இல்லாமல் மோசமான வார்த்தையில் ஆ.ராசா பேசியுள்ளார்.
இப்படி நல்லவர்கள் யாரும் பேசமாட்டார்கள். திமுகவில் யாரும் நல்லவர்கள் இல்லை. அதிமுக அரசு திட்டங்களை திமுக அரசு நிறுத்தி விட்டது. திமுக அரசு 3 ஆண்டுகளில் எந்த திட்டமும் தரவில்லை.
அதிமுக கட்சி, சின்னத்தை முடக்க பார்த்தார்கள். உலகில் மிகப்பெரிய கட்சி அதிமுக. திமுகவிற்கு வாக்களிக்க மக்கள் யாரும் தயாராக இல்லை. திமுகவினரே திமுக ஆட்சிக்கு வாக்களிக்க மாட்டார்கள்.
கூட்டணி குறித்து எடப்பாடி பழனிசாமி முடிவு செய்வார். அதிகமான எம்.பி.க்களை நாம் ஜெயிப்போம். திமுக, பாஜகவில் புதிதாக யாரும் சேர்வதில்லை. வயதானவர்கள், ஓய்வு பெற்றவர்கள் தான் அக்கட்சிகளில் சேர்க்கின்றனர்.
அதிமுகவில் இளைஞர்கள் கொத்து கொத்தாக சேர்க்கிறார்கள். நமக்கு எதிரி திமுக தான். அதிமுகவிற்கு போட்டி திமுக உடன் மட்டும் தான். மற்ற கட்சிகள் நம்முடன் போட்டி போடவே முடியாது.
சட்டமன்ற தேர்தல் எப்போது வந்தாலும் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வருவார். நாடாளுமன்ற தேர்தலில் திமுக தோற்கடிக்கப்பட வேண்டும். நல்ல கூட்டணி வரும். அதிமுக கட்சியை பார்த்தே திமுக பயப்படுகிறது.
தொண்டர்களை சோர்வடைய செய்ய அதிமுக உடன் கூட்டணிக்கு யாரும் வரவில்லை என பொய் செய்திகளை பரப்புகிறார்கள்” எனப் பேசினார்.
தொடர்ந்து, செய்தியாளர்களிடம், “வருகின்ற 9-ம் தேதி அவிநாசியில் ஆ.ராசாவை கண்டித்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
மக்கள் விரோத திமுக ஆட்சியில் கோவை மாவட்டத்திற்கு எந்த திட்டமும் வரவில்லை. கடந்த 3 ஆண்டுகளில் கோவை மாவட்டம் புறக்கணிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் எடப்பாடியார் தலைமையில் 40தும் வெல்வோம்” என்றார். இரட்டை இலை சின்னம் தங்களுக்கு தான் கிடைக்கும் என்ற ஓ.பி.எஸ் கருத்து குறித்த கேள்விக்கு எஸ்பி வேலுமணி பதிலளிக்கவில்லை.
செய்தியாளர் பி.ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“