முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீடு அவர் தொடர்புடைய 50க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் நேற்று சோதனை நடத்திய நிலையில், இன்று திடீரென தூத்துக்குடிக்கு வந்த எஸ்.பி.வேலுமணி திருச்செந்தூரில் சாமி தரிசனம் செய்ததாக தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சரும் அதிமுகவைச் சேர்ந்த சட்டமன்ற கொறடாவுமான எஸ்.பி. வேலுமணியின் கோவை சுகுணாபுரத்தில் உள்ள வீடு மற்றும் அவர் தொடர்புடையவர்களின் 53 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நேற்று (ஆகஸ்ட் 10) சோதனை நடத்தினார்கள்.
அதிமுக ஆட்சிக் காலத்தில் எஸ்.பி.வேலுமணி உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது, அரசு ஒப்பந்தங்களை தனது உறவினர்கள், நண்பர்களுக்கு வழங்கி முறைகேட்டில் ஈடுபட்ட புகாரில் எஸ்.பி. வேலுமணி மற்றும் அவருடைய உறவினர்கள் உள்பட 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏஸ் டெக் மெஷினரி, கன்ஸ்டிரானிக்ஸ் இன்ஃப்ரா, கன்ஸ்டிரோமால் உள்ளிட்ட நிறுவனங்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அமைச்சர் வேலுமணியிடம் விசாரணையும் நடத்தினார்கள். சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றபட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடவடிக்கை எதிர்க்கட்சியின் மீது அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என்று அதிமுக தலைவர்கள் ஓபிஎஸ் - இபிஎஸ் விமர்சித்துள்ளனர்.
இந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திடீரென இன்று தூத்துக்குடி விமானம் நிலையத்திற்கு வந்தார். தூத்துக்குடிக்கு விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.பி.வேலுமணி, “நான் நேற்றே (ஆகஸ்ட் 10) கோயிலுக்கு வருகிற மாதிரி இருந்தது. நேற்று மதியமே வந்து கோயிலில் தங்குவது போல இருந்தது. ஆனால், இது போல சூழ்நிலை நடந்துவிட்டதால் இப்போது வந்தேன். கோயிலில் தரிசனம் முடித்துவிட்டு வருகிறேன். எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் இருவருடன் இணைந்து கலந்து பேசி விட்டு விரைவில் என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு குறித்து பதில் அளிப்பேன். பத்திரிகையாளர் சந்திப்பில் முழு விளக்கம் கொடுப்பேன்” என்று கூறினார்.
எஸ்.பி.வேலுமணி வீடு அவர் தொடர்புடைய இடங்களில் நேற்று லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை நடத்திய நிலையில், இன்று எஸ்.பி.வேலுமணி, தூத்துக்குடிக்கு விமானம் மூலம் வந்து திருச்செந்தூரில் சாமி தரிசனம் செய்துள்ளார். எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் இருவருடன் இணைந்து கலந்து பேசி விட்டு விரைவில் என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு குறித்து பதில் அளிப்பேன் என்று அவர் கூறியிருப்பது கவனம் பெற்றுள்ளது. மேலும் அவர் திருச்செந்தூரில் சிறப்பு பூஜை சிற்ப்செய்ததாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"