முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் தி.மு.க செய்தித் தொடர்பாளருமான கோவை செல்வராஜ் மாரடைப்பால் திருப்பதியில் வெள்ளிக்கிழமை காலமானார். அவருக்கு வயது 66. திருப்பதியில் மகனின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற கோவை செல்வராஜ் திடீரென மாரடைப்பால் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை செல்வராஜ், கோவை மேற்கு தொகுதியில் 1991-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி சார்பில் எம்.எல்.ஏ-வாக தேர்வு செய்யப்பட்டார். நீண்ட காலம் காங்கிரஸ் கட்சியில் இருந்த கோவை செல்வராஜ், பின்னர் அ.தி.மு.க.,வில் இணைந்தார்.
அ.தி.மு.க-வில் செய்தித் தொடர்பாளராக இருந்த கோவை செல்வராஜ், பின்னர், ஓ.பி.எஸ் அணியில் இருந்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க-வில் இணைந்தார். கோவை செல்வராஜுக்கு தி.மு.க-வில் தொடர்பாளர் பதவி வழங்கப்பட்டது.
இந்நிலையில், கோவை செல்வராஜ் தனது மகன் திருமண விழாவுக்காக திருப்பதி சென்று இருந்தார். அங்கு அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். நாளை (நவம்பர் 9) காலை அவரது உடல் கோவை கொண்டு வரப்பட்டு கோவையில் அடக்கம் செய்யப்பட உள்ளது.
திருப்பதி மலையில் இருந்து கீழே இறங்கும்போது கோவை செல்வராஜ் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார் என்று அவருடைய மகன் கூறியதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“