பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை திங்கள்கிழமை (பிப்.26,2024) மாலை 5 மணிக்கு கோயம்புத்தூரில் முக்கியமான நபர்கள் பாஜகவில் இணைய உள்ளதாகவும், தேதி, நேரம், இடத்துடன் கூறுகிறேன் எனவும் தெரிவித்து இருந்தார்.
இதனால் அதிமுகவை சேர்ந்த முக்கியமான நபர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் அல்லது முன்னாள் அமைச்சர்கள் பாஜகவில் இணையலாம் என எதிர்பார்ப்பு நிலவியது.
இந்த நிலையில் இன்று கோவை - அவிநாசி சாலையில் உள்ள தனியார் விடுதியில் இணைப்பு விழா நிகழ்ச்சி மற்றும் செய்தியாளர் சந்திப்பு நடைபெறும் என பாஜகவினர் தெரிவித்து இருந்தனர்.
இந்த நிகழ்ச்சிக்கு சென்ற பத்திரிகையாளர்கள் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்த நிலையில், முக்கிய நபர்கள் யாரும் வரவில்லை.
இங்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வராத நிலையில், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பாஜகவில் மாற்று கட்சியினர் இணையும் நிகழ்ச்சி பிரதமரின் பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களினால் அடுத்த வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டு இருப்பதாக பாஜக மாநிலத் துணைத்தலைவர் கே.பி. ராமலிங்கம் தெரிவித்தார்.
இதையடுத்து பேசிய எல்.முருகன், “பிரதமர் நரேந்திர மோடி நாளைய (அதாவது இன்று) தினம் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க வருகை தர உள்ளார்.
என் மண் என் மக்கள் யாத்திரை 234 தொகுதிகளிலும் மக்களின் பேராதரவோடு நடந்தது. பிரதமர் மோடியின் 10 ஆண்டு சாதனையை எடுத்து செல்லும் வகையிலும், திமுக அரசின் தோல்விகளை எடுத்து செல்லும் வகையிலும் இந்த யாத்திரையாக இருந்தது.
எந்த அரசியல் கட்சியும் நடத்திடாத வகையில் மிக பிரமாண்டமாக நாளை நிகழ்ச்சி நடைபெறும். பிரதமர் மோடியின் இரண்டு நாள் பயணம் தமிழகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
பாஜக ஆட்சியில் 11 லட்சம் கோடி ரூபாய் திட்டங்கள் தமிழகத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ் மொழி, தமிழ் கலாச்சாரத்திற்கு பெருமை சேர்க்கும் மோடிக்கு தமிழக மக்கள் சார்பில் வரவேற்பு அளிக்க உள்ளோம். பிரதமர் மோடி வருகை செய்தி மக்களிடம் சேர வேண்டும்.
மாற்று கட்சியினர் இணைப்பு விழா நிகழ்ச்சி தள்ளி போய் உள்ளது. தமிழ்நாடு வேகமாக வளர காரணம் மோடியின் தனிப்பட்ட அக்கறையே காரணம். பாதுகாப்பு அம்சம் உள்ளிட்ட காரணங்களால் இணைப்பு விழா ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
அனைத்து கட்சியில் இருந்தும் பாஜகவிற்கு வர உள்ளார்கள். மாற்று கட்சியினர் மோடியின் ஆட்சியின் மீது நம்பிக்கை வைத்து அவர்களாக வருகிறார்கள் எனத் தெரிவித்தார்.
அப்போது இந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது குறித்த கேள்விக்கு கோபத்தோடு, எல்.முருகன் செய்தியாளர்களிடம் வாக்குவாதம் செய்தார்.
பாஜக"வின் இணைப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்க நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய அக்கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜா அம்மையப்பன், பல மணி நேரமாக காத்திருந்தார்.
திட்டமிட்டப்படி இணைப்பு விழா நிகழ்ச்சி நடைபெறாததால் ஏமாற்றத்துடன் அவர் திரும்பி சென்றார்.
இதுகுறித்து செய்தியாளர்கள் அவரிடம் கேட்ட போது அவர், “கட்சியில் இணைந்த பிறகு பேசுகிறேன். வேறு வேலையாக இங்கு வந்தேன். ஹோட்டலில் தங்கி இருந்தேன். பிறகு பேட்டி தருகிறேன். எந்த ஏமாற்றமும் இல்லை. நாம் தமிழர் கட்சியில் இருந்து வெளியே வந்து விட்டேன். பிரதமரை சந்திக்க வாய்ப்பு கேட்டுள்ளேன். நான் வேறு கட்சியில் சேர்ந்து விட்டேன் எனத் தெரிவித்தார்.
பின்னர் விடுதியில் வெளியே வந்த ராஜா அம்மையப்பன், தமிழக பா.ஜனதாவின் மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டியிடம் பூங்கொத்து கொடுத்தார். அதற்கு அவர் “வெல்கம்” எனத் தெரிவித்தார்.
இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ராஜா அம்மையப்பன், “நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகியுள்ளேன். நாளை பிரதமரை சந்தித்து இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என வலியுறுத்த உள்ளேன். அவர்கள் பிரதமரை சந்திக்க வாய்ப்பு தருவதாக கூறியுள்ளார்கள்.
நான் பாஜக கட்சியில் இணைய வரவில்லை எனத் தெரிவித்தார். சி.ஏ.ஏ.வில் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கப்படவில்லையே என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, பதில் அளிக்காமல் அவர் தெறித்து ஓடினார்.
செய்தியாளர் பி.ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.