திமுக தலைவர் கருணாநிதிக்கு, சென்னை காவேரி மருத்துவமனையில், இன்று 7-வது நாளாக தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், முன்னாள் பிரதமரும், மதச்சார்பற்ற ஜனதாதள கட்சியின் தலைவருமான தேவகவுடா இன்று மாலை சென்னை வந்தார். அவர் காவேரி மருத்துவமனை சென்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி ஆகியோரை சந்தித்து கருணாநிதியின் உடல் நலம் குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, “கலைஞரை தூரத்தில் இருந்து பார்த்தேன். நலமுடன் இருக்கிறார். திமுக தலைவர் கலைஞர் நூற்றாண்டைக் கடந்து வாழ்வார். தமிழகத்தில் எண்ணற்ற பல சேவைகளை செய்து தேசிய அளவில் கவனம் ஈர்த்தவர். தேசிய அளவில் கூட்டணி ஆட்சியை சாத்தியமாக்கியவர் கலைஞர். மத்தியில் நிலையான ஆட்சி அமைய அவரது பங்கு முக்கியமானதாக இருந்தது” என்று தெரிவித்தார்.
இந்நிலையில், நடிகரும் தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான நடிகர் விஷால், கருணாநிதியின் உடல்நிலை குறித்து அறிய காவேரி மருத்துவமனைக்கு வந்தார். அங்கு, அவர் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினிடம் கருணாநிதியின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.

வரும் ஆகஸ்ட் 5ம் தேதி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், கருணாநிதியின் உடல் நிலை பற்றி விசாரிக்க சென்னை வரவுள்ளார். அதன் பிறகு தொடர் சிகிச்சையில் உள்ள கருணாநிதி வீடு திரும்பலாம் என்றும் கூறப்படுகின்றது.