திருச்சி மாவட்டம் பெரகம்பியை சேர்ந்தவர் சீனிவாசன், இவர் விவசாயி ஆவார். இவர், அடிதடி வழக்கில் சிறைக்கு அனுப்பாமல் குற்றத்தை குறைத்து பதிவு செய்து காவல் பிணையில் விடுவிக்க, ஆறாயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டார் சிறுகனூர் காவல்நிலைய முன்னாள் காவல் ஆய்வாளர் செல்வராஜ்.
ஆகையால் இவர்மீது 2006 ஆம் ஆண்டு திருச்சியில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு வழக்கு பதிவு செய்தனர்.
திருச்சி ஊழல் தடுப்பு வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்ற நிலையில், நீதிபதி கார்த்திகேயன் இன்று இந்த வழக்கிற்கான தீர்ப்பை அறிவித்தார்.
முன்னாள் காவல் ஆய்வாளர் செல்வராஜுக்கு லஞ்ச பணம் கேட்டதிற்காக ஓராண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அதைக்கட்ட தவறினால், ஆறு மாதம் சிறை தண்டனையும் விதித்து உத்தரவிட்டார்.
மேலும் அரசு பதவியை தவறாக பயன்படுத்திற்காக ஐந்தாண்டுகள் கடுங்காவல் தண்டனை, பத்தாயிரம் ரூபாய் அபராதமும் கட்ட தவறினால், ஆறு மாதம் சிறை தண்டனையும் விதித்து இந்த தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிட்டார்.
கடந்த 2006 ஆம் ஆண்டு பதியப்பட்ட இந்த வழக்கில், குற்றவாளியான முன்னாள் காவல் ஆய்வாளர் தொடர்பான குற்றப்பத்திரிகையினை, அப்போதைய ஊழல் தடுப்பு டிஎஸ்பி அம்பிகாபதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
ஊழல் தடுப்பு, கண்காணிப்பு காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் மணிகண்டன் சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியும், வழக்கினை அரசு வழக்கறிஞர் சுரேஷ்குமார் நடத்தியும், லஞ்சம் வாங்கிய வழக்கில் காவல் ஆய்வாளரை விசாரித்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய ஊழல் தடுப்பு ஆய்வாளர் பிரசன்ன வெங்கடேஷ் உள்ளிட்டவர்களை ஊழல் தரப்பு நீதிமன்றம் பாராட்டியது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil