அ.தி.மு.க-வின் முன்னாள் ராஜ்யசபா உறுப்பினர் மைத்ரேயன். சென்னையில் பிறந்து மருத்துவராக பணிபுரிந்த இவர், அவரது ஆரம்ப நாட்களிலிருந்தே, ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தில் (ஆர்.எஸ்.எஸ்) உறுப்பினராக இருந்தார். 1991 இல், பாரதிய ஜனதா கட்சியின் (பா.ஜ.க) தமிழ்நாடு பிரிவின் நிர்வாக உறுப்பினரானார். 1995 முதல் 1997 வரை பா.ஜ.க-வின் தமிழ்நாடு பிரிவு பொதுச் செயலாளராகவும், 1997 முதல் 1999 வரை துணைத் தலைவராகவும், 1999 முதல் 2000 வரை தலைவராகவும் பணியாற்றினார்.
மைத்ரேயன் 2000 ஆம் ஆண்டு பா.ஜ.க-வில் இருந்து விலகி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் (அ.தி.மு.க) சேர்ந்தார். அப்போது அவருக்கு ராஜ்யசபா உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் அ.தி.மு.க இரண்டு அணியாக பிரிந்த போது, அவர் ஓ.பன்னீர்செல்வம் அணியில் சேர்ந்த நிலையில், அவரை அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். இதனையடுத்து, ஜூன் 09, 2023-ல் மைத்ரேயன் பா.ஜ.க-வில் இணைந்தார்.
இந்நிலையில், மைத்ரேயன் தற்போது மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அ.தி.மு.க-வில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பா.ஜ.க-வில் பெரும் எதிர்பார்ப்புடன் மைத்ரேயன் இணைந்த சூழலில், அவருக்கு அங்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், எடப்பாடி பழனிச்சாமியை மைத்ரேயன் சந்தித்துள்ளதாகவும் மீண்டும் அ.தி.மு.க-வில் இணைவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“