/indian-express-tamil/media/media_files/2025/07/21/anwar-raja-dmk-2025-07-21-10-48-28.jpg)
தமிழ்நாட்டில் கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின் போது அ.தி.மு.க - பா.ஜ.க இடையே கூட்டணி ஏற்பட்டது. எனினும், இந்தக் கூட்டணியால் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை. பா.ஜ.க மாநில தலைவராக பொறுப்பேற்ற அண்ணாமலை அ.தி.மு.க-வின் முன்னோடிகளான அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரை விமர்சித்தார். இது அப்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அண்ணாமலைக்குப் பின், பா.ஜ.க மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்ற நிலையில், அ.தி.மு.க-வுடன் பா.ஜ.க மீண்டும் கூட்டணி அமைப்பது குறித்து திரைமறைவில் பலகட்ட பேச்சுவார்த்தை நிலவியது. இறுதியாக, கடந்த ஏப்ரல் மாதம் சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணியை உறுதி செய்தார்.
இந்நிலையில், கடந்த 7 ஆம் தேதி தமிழ் நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்த அ.தி.முக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சரும், ராமநாதபுரம் முன்னாள் எம்.பி-யுமான அன்வர் ராஜா, தமிழ்நாட்டில் காலூன்ற துடிக்கும் பா.ஜ.க-வின் எண்ணம் ஒருக்காலும் நடக்காது என்றும், பா.ஜ.க-வுடன் அ.தி.மு.க கூட்டணி சேர்ந்துள்ளதால், சிறுபான்மையினர் வாக்குகள் பெரும்பாலும் கிடைக்காது. அதேநேரத்தில், அ.தி.மு.க-வின் வாக்குகள் கண்டிப்பாக கிடைக்கும் என்றும் தெரிவித்து இருந்தார்.
மேலும், கூட்டணி ஆட்சி அமைந்தால், அதில் செங்கோட்டையன், வேலுமணி போன்றவர்களை வைத்து பா.ஜ.க. திட்டமிடுமா? என்ற கேள்விக்கு, அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் அ.தி.மு.க. தவிடுபொடியாகும் என்றும் அவர் எச்சரித்து இருந்தார். தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி என அமித் ஷா கூறியது குறித்த கேள்விக்கு, அ.தி.மு.க பெரும்பான்மையான இடத்தைப் பிடிக்கும் என்றும், தமிழ்நாட்டில் ஒரு போதும் கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் அன்வர் ராஜா பதிலளித்து இருந்தார். அ.தி.மு.க-வின் மூத்த தலைவரான அன்வர் ராஜாவின் இந்தப் பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாக மாறியது. அவரது பேச்சுக்கு அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க-வினரிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இந்நிலையில், அ.தி.மு.க அமைப்புச் செயலாளராக இருந்த ராமநாதபுரம் முன்னாள் எம்.பி அன்வர் ராஜா தி.மு.க-வில் இணையவுள்ளதாக தகவல் வெளியானது. இதையடுத்து, அவரை அ.தி.மு.க-வில் இருந்து நீக்கினார் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
இதனைத் தொடர்ந்து, அ.தி.மு.க முன்னாள் எம்.பி. அன்வர் ராஜா முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க-வில் இணைந்தார். பா.ஜ.க-வுடன் அதிமுக கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அன்வர் ராஜா தி.மு.க-வில் இணைந்திருக்கிறார். தொடர்ந்து, இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "தளபதி மு.க.ஸ்டாலின் முன்னிலையில் என்னை இன்று தி.மு.க-வில் இணைத்துக்கொண்டேன். கருத்தியல் ரீதியாக நாங்கள் எல்லாம் வளர்ந்தவர்கள். ஆனால் அதற்கு புறம்பாக இப்போது அ.தி.மு.க இருக்கிறது. அ.தி.மு.க தன்னுடைய கொள்கையில் இருந்து தடம்புரண்டு பா.ஜ.க-வின் கையில் சிக்கியுள்ளது. தேசியவாத காங்கிரஸ், சிவசேனாபோல் அதிமுகவையும் உடைப்பதே பா.ஜ.க-வின் எண்ணம்.
பா.ஜ.க எந்த கட்சியுடன் சேர்ந்தாலும் அதை அழிப்பது தான் நோக்கம்; அ.தி.மு.க-வை அழித்துவிட்டு தி.மு.க-வுடன் நேரடியாக மோத வேண்டும் என்பதுதான் பா.ஜ.க-வின் அஜெண்டா. 3 முறை பேட்டி அளித்த மத்திய அமைச்சர் அமித்ஷா ஒரு இடத்தில் கூட முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான் என கூறவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும். அக்கூட்டணியில் பா.ஜ.க இடம்பெறும் என்றுதான் சொல்கிறார்.
அ.தி.மு.க வென்றால் நான்தான் முதலமைச்சர் வேட்பாளர் என்று எடப்பாடியாலும் இன்னும் உறுபதிட தெரிவிக்க முடியவில்லை. நான்தான் போரை நிறுத்தினேன் என்று டிரம்ப் கூறுவதைப் போல நான்தான் முதலமைச்சர் வேட்பாளர் என்று எடப்பாடி பழனிசாமி 10 நாட்களாக கூறி வருகிறார். அந்தளவிற்குத்தான் அவரின் நிலைமை இருக்கிறது. பா.ஜ.க ஒரு நெகடிவ் சக்தி. அதை தமிழ்நாடு மக்கள் ஒருபோதும் பா.ஜ.க-வை ஏற்க மாட்டார்கள்."என்று அவர் கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.