/indian-express-tamil/media/media_files/2025/08/19/former-supreme-court-judge-b-sudershan-reddy-is-opposition-vp-candidate-tamil-news-2025-08-19-13-29-41.jpg)
எதிர்க் கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணி சார்பில் போட்டி வேட்பாளராக முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி சுதர்ஷன் ரெட்டி ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் 16-வது துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர் கடந்த மாதம் 21 ஆம் தேதி திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். கடந்த 2022 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், தனது உடல் நிலையை கருத்தில் கொண்டு பதவி விலகுவதாக ஜனாதிபதிக்கு அவர் கடிதம் அனுப்பினார். அவரது ராஜினாமாவை ஜனாதிபதி திரவுபதி முர்முவும் ஏற்றுக்கொண்டார்.
அவரின் பதவிக்காலம் இன்னும் 2 ஆண்டுகள் இருந்த நிலையில் ஜெகதீப் தன்கர் திடீரென பதவி விலகியது அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி தூணடியது. அவரின் ராஜினாமா செய்ததை தொடர்ந்து, புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான ஆயத்தப்பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கி, புதிய துணை ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் 9 ஆம் தேதி நடைபெறும் என அறிவித்தது. நாடாளுமன்றத்தில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்றும், அதைத்தொடர்ந்து உடனே வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவு அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், துணை ஜனாதிபதி பதவிக்கு ஆளும் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தமிழகத்தைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்பாளராக களமிறங்குகிறார். இந்த நிலையில், எதிர்க் கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணி சார்பில் போட்டி வேட்பாளராக முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி சுதர்ஷன் ரெட்டி ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்டார். இதுகுறித்து அவர் கூறுகையில், “அகில இந்திய கூட்டணி கட்சிகள் ஒரு பொதுவான வேட்பாளரை நிறுத்த முடிவு செய்துள்ளன, இந்த முடிவு ஒருமனதாக எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒரே பெயருக்கு ஒப்புக்கொண்டதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இது ஜனநாயகத்திற்கு ஒரு பெரிய சாதனை" என்று தெரிவித்துள்ளார். மேலும் நாளை மறுநாள் சுதர்ஷன் ரெட்டி வேட்புமனு தாக்கல் செய்வார் என்று கூறப்பட்டுள்ளது.
78 வயதான நீதிபதி சுதர்சன் ரெட்டி, 40 ஆண்டுகளாக சட்டத்துறையில் பணியாற்றி அனுபவம் கொண்டவர். ஜூலை 8, 1946 இல் பிறந்த இவர், 1971 இல் ஆந்திரப் பிரதேச பார் கவுன்சிலில் தனது சட்டப் பயணத்தைத் தொடங்கினார். ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றத்தில் (1988–1990) அரசு வழக்கறிஞராகவும், உஸ்மானியா பல்கலைக்கழகத்தின் சட்ட ஆலோசகராகவும், மத்திய அரசின் கூடுதல் நிலை ஆலோசகராகவும் பணியாற்றினார்.
1995 இல் ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின்னர் 2005 இல் கவுகாத்தி உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உயர்த்தப்பட்டார். ஜனவரி 2007 இல் இந்திய உச்ச நீதிமன்றத்திற்கு நியமிக்கப்பட்டதன் மூலம் அவரது நீதித்துறை வாழ்க்கை உச்சத்தை அடைந்தது. ஜூலை 2011 இல் ஓய்வு பெறும் வரை அங்கு பணியாற்றினார் என்பது குறிபிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.