கடந்த 2017ம் ஆண்டு அதிமுக அரசு சார்பில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் உள்ளதாக கூறி இதுதொடர்பாக விசாரணை நடத்த உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. கடந்த 2019ம் ஆண்டு அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் முன்பு விசாரணைக்கு ஆஜராகுவதிலிருந்து விலக்கு அளித்தும், ஆணைய விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
அந்த இடைக்கால தடையை நீக்கக் கோரி தமிழக அரசு சார்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி அப்துல் நசீர் தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் 154 சாட்சிகளை விசாரித்துள்ள நிலையில் இனி 4 சாட்சிகள் மட்டுமே விசாரிக்க எஞ்சியுள்ளதாகவும் ஒரு மாதத்திற்குள் விசாரணை அறிக்கையை சமர்பிக்க முடியும் என ஆறுமுகசாமி ஆணையம் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
154 சாட்சிகளில், அப்பல்லோ மருத்துவமனை சேர்ந்த 56 மருத்துவர்கள், எய்ம்ஸ் மருத்துவமனையைச் சேர்ந்த 5 மருத்துவர்கள், தமிழக அரசு அமைத்த ஐந்து மருத்துவர்களின் மருத்துவக் குழு உட்பட 12 அரசு மருத்துவர்கள், 22 துணை மருத்துவ ஊழியர்கள் மற்றும் பிற சாட்சிகள் அடங்குவர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil