scorecardresearch

முன்னாள் வி.சி.க பிரமுகர் வெட்டிப் படுகொலை: காவல்துறை தீவிர விசாரணை

திருவெறும்பூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் அதிமுகவில் இணைந்த கோபி என்பவரை ஒரு கும்பல் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முன்னாள் வி.சி.க பிரமுகர் வெட்டிப் படுகொலை: காவல்துறை தீவிர விசாரணை

திருவெறும்பூர் அருகே  விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் அதிமுகவில் இணைந்த கோபி என்பவரை ஒரு கும்பல் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து விவரம் வருமாறு;

திருவெறும்பூர் அருகே உள்ள வாழவந்தான் கோட்டை ஈச்சங்காடு பகுதியைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் இவரது மகன் கோபி. இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் நிர்வாகியாக இருந்துள்ளார்.

பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.

இந்தநிலையில் நேற்று இரவு துவாக்குடி அண்ணா வளைவு பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் கோபி  டிபன் ஆர்டர் கொடுத்துவிட்டு சென்றவர் சிறிது நேரம் கழித்து டிபனை வாங்க வந்த பொழுது மூன்று பேர் கொண்ட  கும்பல் கோபியை அறிவாளால் தாக்கியுள்ளனர்.

அப்படி தாக்கும் பொழுது அந்த ஹோட்டலில் இருந்த கல்லாப்பெட்டியில் முதல் வெட்டு விழுந்துள்ளது.

அவர்களிடம் இருந்து கோபி தப்பி ஓட முயன்றபோது  மூன்று பேர் கொண்ட கும்பல் கோபியை இடைமறித்து சரமாரியாக வெட்டி படுகொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

இச்சம்பவம் குறித்து துவாக்குடி போலீசாருக்கு தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்து போன கோபியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் கொலை முன் விரோதத்தால் நடந்ததா அல்லது வேறு ஏதும் காரணமா என தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். மோப்பநாய் லீலி மற்றும் தடைய அறிவியல் ஆய்வக உதவி இயக்குனர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் அங்குள்ள தடயங்களை ஆய்வு செய்து விசாரணை தீவிரப்படுத்தியுள்ளனர்.

கோபி மீதும் அப்பகுதியில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

க.சண்முகவடிவேல்

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Former vck member murder trichy