உழவன் தன் முகத்தை நம்பி தான் சாகுபடியில் ஈடுபட வேண்டும். மற்றவர்களை நம்பினால் ஏமாற்றம் தான் அடைய வேண்டும் என்று வேளாண் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் முனைவர் கே.ராமசாமி கூறினார்.
தமிழக இயற்கை உழவர்கள் மற்றும் ஆர்வலர்கள் கூட்டமைப்பு சார்பில் வரும் செப்டம்பர் 12,13,14 தேதிகளில் கோவை கொடீசியாவில் நடைபெற உள்ளது. அதில் உலக இயற்கை விவசாயிகள் மற்றும் ஆர்வலர்கள் மாநாடு மற்றும் கருத்தரங்கம், நடைபெற உள்ளது, அதற்கான கலந்தாய்வு கூட்டம் தஞ்சாவூர் மண்டல அளவில் தஞ்சாவூர் உணவு பதப்படுத்துதல் நிறுவன கூட்ட அரங்கில் இன்று (29.04.2025) நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளரும், வேளாண் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தருமான முனைவர் கே.ராமசாமி தலைமையேற்றார். உணவு பதப்படுத்துதல் நிறுவன இயக்குனர் பழனிமுத்து, ஒருங்கிணைப்பாளர் பிஆர் பாண்டியன், அமைப்பாளர் வாழை கருப்பையா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வேளாண் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் கே.ராமசாமி பேசியதாவது: இந்தியாவின் ஏற்றுமதியில் 17 சதவிகிதம் வேளாண் உற்பத்தி பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
52% இளைஞர்கள் வேளாண் உற்பத்தி மூலம் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர். உழவன் தன் முகத்தை நம்பி தான் சாகுபடியில் ஈடுபட வேண்டும். மற்றவர்களை நம்பினால் ஏமாற்றம் தான் அடைய வேண்டும்.
எனவே, நம்பிக்கையோடு உற்பத்தியை பெருக்க வேண்டும். தேன் கூட்டில் கிடைக்கும் மகரந்தம் தங்கத்திற்கு இணையான மதிப்பு மிக்கது. அதுபோல தேன் மருத்துவ குணம் கொண்ட உணவு, ஆனால், இன்றைக்கு உலக அளவில் மிகப் பெரும் தட்டுப்பாட்டில் தேன் உள்ளது.
மண்ணுக்கு ஏற்ற பயிர்களை சாகுபடி செய்ய முன்வர வேண்டும், குறிப்பாக உபரி உற்பத்தி செய்கிறபோது தான் விவசாயிகள் தேவை போக, மீதப் பொருளை ஏற்றுமதி செய்து சந்தைப்படுத்த முடியும். அதற்கான வகையில் நம்மை நாமே மாற்றிக் கொள்ள வேண்டும்.
உலகத்தில் 72 நாடுகளில் தமிழர்கள் பணியாற்றி வருகிறார்கள். பன்முகத் தன்மையோடு பணியாற்றக்கூடிய வாய்ப்புகளை தமிழர்கள் பெற்றுள்ளனர். எனவே, கோவையில் நடைபெறும் மாநாடு சந்தைப்படுத்துவதையும், உற்பத்தி சார்ந்த தொழில் நுட்பங்களையும் உலகம் தழுவிய அளவில் பகிர்ந்து கொள்வதற்கான மாநாடாக நடத்தப்படும் என்றார்.
பழனிமுத்து பேசும்போது: உணவு பதப்படுத்துதல் நிறுவனத்தில் தேவையான மதிப்பு கட்டி விற்பனை செய்வதற்கான தொழில் நுட்பங்களும், ஆலோசனைகளும் வழங்கப்படுகிறது. அதற்கான இயந்திர பயிற்சியும் அளிக்கப்படுகிறது. குளிரூட்டப்பட்ட உணவு பாதுகாப்பு கட்டமைப்புகள் உள்ளன. எனவே விவசாயிகள் மதிப்பு கூட்டி தாங்களே விற்பனை செய்வதற்கு துணிவுடன் முன் வர வேண்டும். அவ்வாறு முன் வரும் போது விவசாயிகளுக்கு லாபகரமான தொழிலாக விவசாயம் மாறும். எனவே விவசாயிகள் எங்கள் நிறுவனத்தை அணுகி உரிய தொழில்நுட்பங்களை பெற்றுக் கொள்ள வேண்டுமென்றார்.
/indian-express-tamil/media/media_files/2025/04/30/fvc-2-714646.jpeg)
பி.ஆர்.பாண்டியன் பேசும்போது: தமிழ்நாட்டில் பாரம்பரிய வேளாண் உற்பத்தி தொழில்நுட்பங்கள் விவசாயிகளிடம் நிரம்ப உள்ளது. உற்பத்தி செய்யக்கூடிய பொருட்களை விற்பனை செய்வதற்கு விவசாயிகளால் இயலாது. எனவே வணிகர்கள் சிறுகுறு தொழில் முதலீட்டாளர்கள் விவசாயிகள் கொண்ட உற்பத்தியாளர் குழுக்களை உருவாக்க வேண்டும். அந் நிறுவனங்கள் மூலம் வேளாண் உற்பத்தி பொருட்களை மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றம் செய்து சந்தைப் படுத்துவதற்கு முன்வர வேண்டும்.
வேளாண் கல்வி மற்றும் தொழில் நிர்வாகவியல் படித்த இளைஞர்களை வேளாண் குழுக்களின் நிர்வாகிகளாக தேர்வு செய்து உற்பத்தியாளர் குழுக்களை உருவாக்க வேண்டும். சந்தைப்படுத்துவதற்கு தேவையான ஆலோசனைகளையும் பயிற்சிகளையும் அரசே வழங்க வேண்டும்.
விவசாயிகள் தரமான உணவுப் பொருட்களை உற்பத்தி செய்வதற்கான முறைகளை கையாள வேண்டும். உலக அளவில் சந்தையில் போட்டியை உருவாக்கி விற்பனை செய்யும் நிலையில் விவசாயிகள் தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும். அதற்கான ஆலோசனைகளை மாநாடு வழங்கும். இந்தியாவில் உள்ள பல மாநிலங்களை சார்ந்த ஆய்வாளர்கள், விவசாயிகள் குழு கலந்துரையாடல்கள் நடைபெற்று அறிக்கைகள் முன்வைக்கப்படும்.
/indian-express-tamil/media/media_files/2025/04/30/fvc-3-979099.jpeg)
பயிர்வாரி முறை குறித்து கருத்தரங்கம் ஆய்வரங்கங்கள் நடைபெறும். மாநாடு உலகளாவிய தொழில் நுட்பங்களை பகிர்ந்து கொள்வதற்கும், ஏற்றுமதிக்கான சந்தை வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் உதவிக்கரமாக அமையும். அதற்கான ஆளுமைகளைக் கொண்ட குழு கூட்டங்கள் கலந்துரையாடல்களை மாநாட்டு அரங்கில் நடைபெறும். வெற்றியாளர்களை இதன் மூலம் அடையாளப்படுத்தி ஊக்கப்படுத்தப்படும் என்றார்.
நிகழ்ச்சியில் ஒரத்தநாடு வேளாண் கல்லூரி முதல்வர் ,
திருச்சி அன்பில் தர்மலிங்கம் வேளாண் கல்லூரி முன்னாள் முதல்வர் பாண்டியராஜன், வேப்பங்குளம் தென்னை ஆராய்ச்சி நிறுவன தலைவர் குமணன், தஞ்சை கோ.சித்தர். வேளாண் விஞ்ஞானிகள், கால்நடை மற்றும் சந்தைப்படுத்துதல் துறை சார்ந்த அதிகாரிகள், விவசாயிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
செய்தி: க.சண்முகவடிவேல்