சென்னை கார் பந்தயம்: 'ஓடு பாதையில் மறைமுக மது விளம்பரங்கள்'- அன்புமணி கடும் கண்டனம்

சென்னை ஃபார்முலா- 4 கார் பந்தயப் பாதையில் மறைமுக மது விளம்பரங்கள் உள்ளன. இளைஞர்களை சீரழிக்கும் சட்டவிரோத மதுபான விளம்பரங்களை அகற்ற வேண்டும்- அன்புமணி ராமதாஸ்

சென்னை ஃபார்முலா- 4 கார் பந்தயப் பாதையில் மறைமுக மது விளம்பரங்கள் உள்ளன. இளைஞர்களை சீரழிக்கும் சட்டவிரோத மதுபான விளம்பரங்களை அகற்ற வேண்டும்- அன்புமணி ராமதாஸ்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Anbumani Ramadoss PMK Leader on ground water in Cuddalore mixed with Mercury Tamil News

பா.ம.க  தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,   "சென்னையில் தொடங்கியுள்ள ஃபார்முலா-4  கார் பந்தயப் பாதையான தீவுத்திடலை சுற்றியுள்ள பகுதிகளில் பொதுமக்களின் பார்வையில் பளிச்சென்று படும் வகையில்  கிங்பிஷர் எனப்படும் மதுவகையின் விளம்பரங்கள் மிக அதிக அளவில் வைக்கப்பட்டிருக்கின்றன.  

Advertisment

இத்தகைய விளம்பரங்கள் பார்வையாளர்களின் மனதில் மிக மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும்; அந்த வகை மதுவை அருந்த வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும். மது வகைகளுக்கு செய்யப்படும் இந்த மது விளம்பரமும்,  அதை கார்பந்தயத்தை நடத்தும் அமைப்பும், தமிழக அரசும் அனுமதித்திருப்பதும் கண்டிக்கத்தக்கது. 

மதுபானங்கள் , புகையிலைப் பொருட்கள் ஆகியவற்றின் விளம்பரங்களை நேரடியாக செய்ய தடை விதிக்கப்பட்டிருக்கிறது.  அதனால், மது மற்றும் புகையிலை  நிறுவனங்கள் மறைமுகமாக விளம்பரங்களைத் திணிக்கின்றன. ஒரு மதுபானம் என்ன பெயரில் விற்பனை செய்யப்படுகிறதோ, அதே பெயரில் குடிநீர், சோடா, சர்க்கரை ஆகிய பொருட்களை சந்தையில் அறிமுகம் செய்து அவற்றின் பெயரில் மது விளம்பரங்களை செய்கின்றன. ஆனால், மத்திய அரசின் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்தின் 'Guidelines for Prevention of Misleading Advertisements and Endorsements for Misleading Advertisements, 2022'  எனப்படும் விதிகளின்படி மது விளம்பரங்களை மறைமுகமாகவும் விளம்பரம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. 

அதுமட்டுமின்றி,  சோடா விளம்பரம் என்ற பெயரில் மது விளம்பரங்களையும், சிடி-க்கள், பான்மசாலாக்கள் பெயரில் புகையிலை விளம்பரங்களையும் மறைமுகமாக விளம்பரம் செய்ய தடை விதித்து மத்திய அரசின் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் உத்தரவிட்டிருக்கிறது. மறைமுக மது விளம்பரங்களுக்கு எதிராக இவ்வளவு கட்டுப்பாடுகள் இருக்கும் நிலையில், இவை அனைத்தையும் புறக்கணித்து விட்டு, பல்லாயிரக்கணக்கானவர்கள் பார்வையாளர்களாக பங்கேற்கும் ஒரு விளையாட்டுப் போட்டியில் மறைமுகமாக மது விளம்பரங்கள்  செய்யப்படுவதையும், அதை தடுக்க வேண்டிய தமிழக அரசு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பதையும் அனுமதிக்க முடியாது.

Advertisment
Advertisements

கடந்த காலங்களில் மட்டைப் பந்து போட்டிகளின் போது மறைமுகமாக மது மற்றும் புகையிலை விளம்பரங்கள் செய்யப்படுவதை பாட்டாளி மக்கள் கட்சியும், பசுமைத் தாயகம் அமைப்பும் சுட்டிக்காட்டி தடுத்திருக்கின்றன. இப்போதும் அதே அக்கறையுடன் தான் மது விளம்பரங்களை சுட்டிக் காட்டுகிறேன். பொது நலன் கருதியும், மக்களைக் காக்கும் கடமையை நிறைவேற்றும் வகையிலும்  ஃபார்முலா -4  கார் பந்தயப் பாதையில் வைக்கப்பட்டுள்ள மறைமுக மது விளம்பரங்களை உடனடியாக அகற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியுள்ளார். 

செய்தி: பாபு ராஜேந்திரன் 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: