சென்னையில் நடைபெறும் ஃபார்முலா 4 கார் பந்தயம் பார்க்க செல்லும் பயணிகள், இலவசமாக மெட்ரோ ரயிலில் பயணிக்கலாம் என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் சென்னை ஃபார்முலா 4 ரேஸிங் சர்க்யூட் போட்டி மற்றும் இந்தியன் ரேஸிங் லீக் கார் பந்தயம் இன்றும் நாளையும், (ஆக. 31, செப். 1) நடைபெறுகிறது. தெற்காசியாவிலேயே இரவு நேர ஃபார்முலா 4 ஸ்ட்ரீட் பந்தயத்தை நடத்தும் முதல் நகரமாக சென்னை திகழ்கிறது.
இந்த நிகழ்விற்கு செல்லும் பயணிகளுக்கு தடையற்ற பயணத்தை வழங்க சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சென்னை ஃபார்முலா 4 ரேசிங் சர்க்யூட் உடன் இணைந்து ஸ்பான்சர் செய்யப்பட்ட பிரத்யேக மெட்ரோ QR பயணச்சீட்டுகளை பயணிகளுக்கு வழங்குகிறது.
“Paytm Insider” மூலம் முன்பதிவு செய்யப்பட்ட சரியான டிஜிட்டல் டிக்கெட்டுகளுடன் நிகழ்வில் பங்கேற்பவர்களுக்கு மட்டுமே இந்த ஸ்பான்சர் செய்யப்பட்ட பிரத்யேக டிஜிட்டல் மெட்ரோ பாஸ்கள் வழங்கப்படும்.
இந்த மெட்ரோ பாசை பயன்படுத்தி பயணிகள் எந்த ஒரு மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்தும் கார் ரேசிங் நிகழ்வு நடைபெறும் இடத்திற்கு மிக அருகில் உள்ள அரசினர் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு சென்று திரும்ப முடியும்.
நிகழ்வில் பங்கேற்பவர்கள் தங்கள் டிஜிட்டல் மெட்ரோ பாஸில் உள்ள தனித்துவமான QR குறியீட்டை தானியங்கி கட்டணம் பெறும் இயந்திரத்தில் ஸ்கேன் செய்து மெட்ரோவில் பயணிக்கலாம்.
இந்த சிறப்பு மெட்ரோ பாஸ்களை ஒரு சுற்றுப்பயணத்திற்கு (2 நுழைவு மற்றும் 2 வெளியேறுதல்) பயன்படுத்தலாம். Paytm இன்சைடர் வாங்கப்பட்ட டிஜிட்டல் டிக்கெட்டுகள் உள்ளவர்களுக்கு மட்டுமே ஸ்பான்சர் செய்யப்பட்ட மெட்ரோ பயணம் கிடைக்கும். வேறு எந்த டிக்கெட்டுகளும் அல்லது பாஸ்களுக்கும் இந்த சலுகை கிடையாது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“