நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகான, சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் பிரியா ராஜன் தலைமையில் நேற்று (ஜூன் 24) ரிப்பன் மாளிகை கூட்டரங்கில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் துணை மேயர் மகேஸ் குமார், மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்., நிலைக்குழுத் தலைவர்கள், மண்டலக்குழுத் தலைவர்கள், அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த மாமன்ற உறுப்பினர்கள், அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தின் இறுதியில் பல்வேறு முக்கிய தீர்மானங்களை மேயர் பிரியா நிறைவேற்றினார்.
குறிப்பாக, நிறுத்தி வைக்கப்பட்ட ஃபார்முலா 4 கார் பந்தயம் தொடர்பான செலவீனங்கள், சாலை உள்ளிட்ட பணிகளுக்காக சென்னை மாநகராட்சி ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்கவேண்டிய பாக்கி பணத்தை தமிழ்நாடு அரசு விடுவிக்கவேண்டும் எனக் கோரி இந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதன்படி, கடந்த 2023 டிசம்பர் மாதம் நடைபெறுவதாக இருந்த ஃபார்முலா 4 கார் பந்தயம் மிக்ஜாம் புயல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது. அந்த கார் பந்தயத்துக்காக கூடுதல் தரமான சாலைகள் அமைக்கப்பட்டன.
இதனால் ஒதுக்கப்பட்ட தொகையான ரூ.6 கோடியைத் தாண்டி கூடுதலாக ரூ.9.65 கோடி செலவானது. கார் பந்தயம் நடத்துவதற்காக மொத்தமாக ரூ. 15.65 கோடி செலவிடப்பட்டது.
இந்த கூடுதல் செலவு விவகாரத்தில் சம்மந்தப்பட்ட ஒப்பந்ததாரர்களுக்கான நிலுவைத் தொகை கொடுக்கவேண்டும். எனவே, சென்னை மாநகராட்சிக்கு ரூ.8.25 கோடியை தமிழ்நாடு அரசு விடுவிக்கவேண்டும், என சென்னை மாநகராட்சி கேட்டுக் கொண்டுள்ளது.
முன்னதாக, தெற்காசியாவில் முதன்முறையாக இரவு நேர பார்முலா-4 கார் பந்தயத்தை சென்னை தீவுத்திடலை சுற்றியுள்ள சாலை மார்க்கமாக கடந்த டிச.9,10 ஆகிய தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டது.
இதனிடையே, டிசம்பரில் ஏற்பட்ட மி்க்ஜாம் புயல், மழை வெள்ள பாதிப்பு காரணமாக பார்முலா-4 கார் பந்தயம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த பந்தயத்தை சென்னை மாநகருக்குள் நடத்த தடை விதிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
இதனால் தமிழக அரசுக்கு எந்தவொரு வருவாயும் இல்லை. இதற்காக தமிழக அரசு ரூ.40 கோடியை செலவு செய்திருப்பது தவறு. பந்தயம் நடக்கும் பகுதியில் அரசு பன்னோக்கு மருத்துவமனை உள்ளதால் நோயாளிகளுக்கும், பொதுமக்களுக்கும் பாதிப்பு ஏற்படும். பொது போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படும், எனவே, இந்த கார் பந்தயத்தை சென்னைக்குள் நடத்த தடை விதிக்க வேண்டும் என வழக்கு மனுவில் கோரப்பட்டிருந்தது
இந்த வழக்குகளை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம், நிகழ்ச்சியை நடத்த அனுமதி அளித்தது. ஆனால் மாநில அரசு செய்த செலவினங்களை திருப்பிச் செலுத்துவது போன்ற சில நிபந்தனைகளை விதித்தது.
மாநில அதிகாரிகளின் ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்புடன் கூடிய வசதிகள் மற்றும் ஏற்பாடுகளைத் தவிர RPPL எதையும் எதிர்பார்க்க முடியாது. நிகழ்ச்சிக்கான செலவை RPPL மட்டுமே ஏற்க வேண்டும், என்று உயர் நீதிமன்றம் கூறியது.
இதனிடையே ஃபார்முலா 4 ஸ்ட்ரீட் ரேஸ் சர்கியூட் அமைப்பதற்காக தமிழ்நாடு அரசு செய்த ரூ.42 கோடி செலவை ரேசிங் புரமோஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் (RPPL) திருப்பிச் செலுத்துமாறு சென்னை உயர் நீதிமன்றம் பிப்ரவரி 19 அன்று பிறப்பித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.
இந்திய தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய 3 நீதிபதிகள் அமர்வு, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த ஆர்பிபிஎல் தரப்பு மூத்த வழக்கறிஞர் அரவிந்த் நய்யாரின் வாதத்திற்குப் பிறகு இடைக்காலத் தடை விதித்தனர்.
மேலும் இந்த மேல்முறையீட்டு மனு ஜூலை 29-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“