ஃபார்முலா 4 கார் பந்தயம் போட்டிகள், சென்னை தீவுத்திடல் மைதானத்தை சுற்றியிருக்கும் 3.5 கி.மீ. சுற்றளவு சாலைகளில் ரூ. 42 கோடி செலவில் நடத்த திட்டமிட்டது. இந்த போட்டிகள் கடந்த ஆண்டு டிச. 9, 10 தேதிகளில் கார் பந்தயம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், மிக்ஜாம் புயல் காரணமாக கார் பந்தய போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டன.
சென்னை சாலைகளில் கார் பந்தயம் நடத்தப்படுதற்கு எதிராக வழக்கும் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் பல்வேறு நிபந்தனைகளுடன் போட்டியை நடத்த அனுமதி அளித்தது. இந்த நிலையில், ஒத்திவைக்கப்பட்ட ஃபார்முலா 4 கார் பந்தயம் போட்டிகள் வருகிற ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆம் தேதிகளில் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் முதல்முறையாக ஃபார்முலா ரேஸிங் சர்க்யூட் நடைபெற உள்ளது. ஸ்ட்ரீட் சர்க்யூட் பந்தயங்களான ஃபார்முலா-4 பந்தயம், சென்னை தீவுத் திடல் மைதானத்தை சுற்றியுள்ள 3.5 கி.மீ சுற்றளவு கொண்ட சாலையில் இரவு போட்டியாக நடத்தப்பட உள்ளது. அதன்படி, தீவுத்திடலில் தொடங்கும் கார் பந்தயமானது அண்ணா சாலை, சிவானந்த சாலை, நேப்பியர் பாலம் வழியாக மீண்டும் தீவுத்திடலை சென்றடைவது போல இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தியா மற்றும் தெற்கு ஆசியாவில் முதல்முறையாக இரவுப் போட்டியாக சாலை வழியாக நடத்தப்படு கார் பந்தயம் இது என்பதால் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு உள்ளது. இதில் இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். எனவே, இந்த போட்டியை நடத்த தமிழ்நாடு அரசு ரூ.42 கோடி ஒதுக்கீடு செய்தது.
போட்டி கட்டண எவ்வளவு?
போட்டிக்கான கட்டணமாக, “ப்ரீமியம் ஸ்டாண்ட் ஒரு நாள் டிக்கெட் கட்டணம் 3,999 ரூபாய், இறுதி நாட்களுக்கான டிக்கெட் கட்டணம் 6,999 ரூபாய், கிரான்ட் ஸ்டாண்ட் 1,2,3,4,5 டிக்கெட் கட்டணம் 1,999 ரூபாய், கிரான்ட் ஸ்டாண்ட் வார இறுதி நாட்களுக்கான டிக்கெட் கட்டணம் ரூபாய் 2,499 , கோல்டு லவுஞ்ச் ஒரு நாள் டிக்கெட் கட்டணம் 7,999, வார இறுதி நாட்களில் கோல்டு லவுஞ்ச் டிக்கெட்டின் விலை 13,999 ரூபாய்க்கும், பிளாட்டினம் லவுஞ்ச் கட்டணம் 12,999 மற்றும் வார இறுதி நாட்களில் 19,999 ரூபாய்” எனவும் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“